அதிருப்தியில் எகிப்து

1 Min Read

ஆர்ஜன்டீனாவுக்கு எதிரான போட்டியில் தமது அணி மோசடிக்கு ஆளானாதாக போட்டி அதிகாரிகள் மீது எகிப்து அணி பயிற்சியாளர் ஹொஸைன் ஹசன் குற்றம்சாட்டியுள்ளார்.

காலிறுதிக்கு முந்திய இந்தப் போட்டியில் எகிப்து அணி ஆட்டத்தின் பெரும்பாலான நேரத்தில் 2–0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றிருந்தபோதே ஆர்ஜன்டீன அணி கடைசி சில நிமிடங்களில மூன்று கோல்களை புகுத்தி வெற்றியீட்டியது.

இந்நிலையில் போட்டிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசி ஹசன், தமது அணி நியாயமற்ற முறையில் நடத்தப்பட்டதாகவும், மத்தியஸ்தரின் பல முடிவுகளும் சர்ச்சைக்குரிய முறையில் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். ‘இன்று நாம் நியாயமற்ற வகையில் மோசடியாக நடத்தப்பட்டோம். எமக்கு அநீதி இழைக்கப்பட்டது’ என்றார.

வீடியோ உதவி நடுவரின் ஆய்வுக்குப் பின்னர் எகிப்தின் ஒருகோல் மறுக்கப்பட்டது மற்றும் தமது அணிக்கு ஒரு பெனால்டி வாய்ப்பு வழங்கப்படாதது குறித்தும் அவர் கேள்வி எழுப்பினார். ஆர்ஜ்டீனாவின் வெற்றி கோலின்போது எகிப்து வீரர் ஜெர்சியால் பிடித்துக் இழுக்கப்பட்டிருந்தார் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘போட்டியில் மரியாதை அல்லது நேர்மையான ஆட்ட உணர்வு இல்லை’ என்று குற்றம்சாட்டிய ஹசன், முக்கிய தீர்ப்புகள் சிலதை நடுவர் தவறாக வழங்கியதாகவும் சில முக்கிய தருணங்களில் வீடியோ உதவி நடுவரை பயன்படுத்தவே இல்லை என்றும் குறிப்பிட்டார்.

மேலும், உலக சம்பியனான ஆர்ஜன்டீன அணியின் தலைவர் லியோனல் மெஸ்ஸி போட்டியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்ற விருப்பம் அதிகாரிகளிடம் இருந்திருக்கலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். ‘ஒருவேளை உலக சம்பியன்கள் இந்தத் தொடரில் நீடிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பியிருக்கலாம். ஒருவேளை மெஸ்ஸி தொடர்ந்து கிண்ணத்திற்கான போட்டியில் இருக்க வேண்டும் என்றும் அவர்கள் நினைத்திருக்கலாம்,’ என்று அவர் குறிப்பிட்டார்.

எகிப்து வீரர் முஸ்தஃபா ஜீகோவும், நடுவர்கள் அர்ஜன்டினாவுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம்சாட்டினார்.

‘நாங்கள் 2–0 என முன்னிலை பெற்ற பின்னர் எல்லாமே எங்களுக்கு எதிராக மாறிவிட்டது. எனது இரண்டாவது கோல் ஏன் நிராகரிக்கப்பட்டது என்பது இன்னும் புரியவில்லை,’ என்றார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *