எகிப்துக்கு எதிரான பரபரப்பு வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது ஆர்ஜன்டீனா

2 Min Read

கடைசி நிமிட கோல்கள் மூலம் பரபரப்பு வெற்றியை பெற்ற நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீன அணி பிஃபா உலகக் கிண்ண காலிறுதிக்கு முன்னேற்றம் கண்டது. கொலம்பிய அணியை பெனால்டி சூட் அவுட்டில் தோற்கடித்த சுவிட்சர்லாந்து அணியுடன் காலிறுதியில் ஆர்ஜன்டீன அணி மோதவுள்ளது.

அட்லாண்டாவில் நடைபெற்ற 16 அணிகள் சுற்றுப் போட்டியில் ஆரம்பத்தில் இரு கோல்கள் புகுத்திய எகிப்து அணி போட்டியில் 78 நிமிடங்கள் வரை 2–0 என வலுவான முன்னிலையை பெற்றிருந்தது. எகிப்து அணியின் தாக்குதல் ஆட்டத்துடன் தற்காப்பு வலுவாக இருந்ததால் ஆர்ஜன்டீனா பதில் கோல் திருப்ப போராட வேண்டி இருந்தது.

ஆட்டத்தின் 15 ஆவது நிமிடத்தில் இப்ராஹிம் மற்றும் 67 ஆவது நிமிடத்தில் ஜிகோ ஆகியோர் எகிப்து அணிக்காக கோல் பதிவு செய்தனர். குறிப்பாக 21 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீனாவுக்கு கிடைத்த பெனால்டி வாய்ப்பை கோலாக மாற்ற மெஸ்ஸி தவறியது அந்த அணிக்கு மேலும் பின்னடைவாக இருந்தது,

எனினும் 79 ஆவது நிமிடத்தில் ஆர்ஜன்டீன அணிக்காக முதல் கோலை பதிவு செய்தார் ரோமெரோ. தொடர்ந்து 83ஆவது நிமிடத்தில் மெஸ்ஸி கோல் பெற ஆட்டம் 2- – 2 என சமநிலைக்கு வந்தது. பின்னர் மேலதிக நேரத்தில் வைத்து ஆர்ஜன்டீன அணிக்கு மூன்றாவது மற்றும் வெற்றி கோலை என்ஸோ பெர்னாண்டஸ் அடித்தார். பெர்னாண்டஸின் இந்த கோல் உலகக் கிண்ண வரலாற்றில் பெறப்பட்ட 3000 ஆவது கோலாக பதிவானது. 1930 ஜூலை 13 ஆம் திகதி பிரான்சின் லுசியேன் லோரன்ஸ் மெக்சிகோவுக்கு எதிராக உலகக் கிண்ணத்தில் முதல் கோலை பெற்றது தொடக்கம் 96 ஆண்டுகள் மற்றும் 23 தொடர்களுக்கு பின்னரே 3000 ஆவது கோல் பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை வான்கூவரில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற சுவிட்சர்லாந்து மற்றும் கொலம்பிய அணிகளுக்கு இடையிலான 16 அணிகள் சுற்றுப் போட்டியில் இரு அணிகளுக்கும் கடைசி வரை கோல் புகுத்த முடியாமல் போனது. இதனால் முடிவை தீர்மானிக்க பெனால்டி சூட் அவுட் வரை சென்ற போட்டியில் சுவிட்சர்லாந்து 4–3 என்ற கோல்களால் வெற்றியீட்டியது. சுவிட்ஸர்லாந்து சுமார் 70 ஆண்டுகளில் முதல்முறையாகக் காலிறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ளது. இதற்கு முன் அது 1954இல் அவ்வாறு முன்னேறியது. அப்போது உலகக் கிண்ணப் போட்டியை சுவிட்ஸர்லாந்து ஏற்று நடத்தியது.

இதன்படி ஆர்ஜன்டீனா மற்றும் சுவிட்சார்லாந்து அணிகள் மோதும் காலிறுதிப் போட்டி எதிர்வரும் ஜூலை 12 ஆம் திகதி கன்சாஸ் சிட்டியில் நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *