அமெரிக்க வீரர் பொலரின் பலோகனுக்கு வழங்கப்பட்ட சிவப்பு அட்டையை சர்வதேச கால்பந்து சம்மேளன சர்ச்சைக்குரிய முறையில் இடைநிறுத்தியதை அடுத்து இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் கால்பந்து சம்மேளனங்களும் தமது அணி வீரர்களுக்கு வழங்கப்பட்ட சிவப்பு மற்றும் மஞ்சள் அட்டைகளையும் இடைநிறுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் விடுத்த வேண்டுகோளை அடுத்தே உலகக் கிண்ண 32 அணிகள் சுற்றில் பலோகனுக்கு வழங்கிய சிவப்பு அட்டையை பிஃபா இடைநிறுத்தியது. இது கால்பந்து உலகில் பெரும் விமர்சனத்திற்கு உள்ளானபோதும் தடையில் இருந்து விடுதலை பெற்ற பலோகன் பெல்ஜியத்திற்கு எதிரான 16 அணிகள் சுற்றில் ஆடி இருந்தார். இது தொடர்பில் பெல்ஜியம் கால்பந்து சம்மேளனத்தின் மேன்முறையீட்டையும் பிஃபா நிராகரித்திருந்தது.
உலகக் கிண்ண விதிகளின்படி, சிவப்பு அட்டைக்கு எதிராக முறையீடு செய்ய அனுமதி இல்லை. இருப்பினும், பிஃபா அதிகாரிகள் தங்களது விதிமுறைகளில் உள்ள 27ஆம் பிரிவை பயன்படுத்தி, பலோகன் மீது விதிக்கப்பட்டிருந்த போட்டித் தடையை இரத்து செய்தது.
இந்த 27ஆம் பிரிவு, உலகக் கிண்ண வரலாற்றில் இதற்கு முன்னர் ஒருபோதும் பயன்படுத்தப்படவில்லை. இந்த விதி, வேறு எந்தத் தகுதி நிபந்தனைகளையும் பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமின்றி, பிஃபா தனது விருப்பப்படி எந்தத் தீர்மானத்தையும் எடுக்க அதிகாரம் வழங்குகிறது என்பதைக் குறிக்கிறது.
இந்நிலையில் பராகுவேவுக்கு எதிரான உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றின்போது மைக்கல் ஒலிஸ் பெற்ற மஞ்சள் அட்டையை ரத்துச் செய்யும்படி பிரான்ஸ் கால்பந்து சம்மேளனம், பிஃபாவிடம் மேன்முறையீடு செய்துள்ளது.
பராகுவே வீரர் மட்டியஸ் கலர்சாலுடன் இடம்பெற்ற வாக்குவதாத்தின்போதே ஒலிஸ் மஞ்சள் அட்டை பெற்றார். அந்தப் போட்டியில் பிரான்ஸ் 1–0 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது. இந்நிலையில் அரையிறுதிப் போட்டியில் தடைக்கு உள்ளாகும் அச்சுறுத்தலை தவிர்க்கும் வகையில் ஒலிஸ் மீதான மஞ்சள் அட்டையை நீக்கும்படியே பிரான்ஸ் கோரியுள்ளது.
பிரான்ஸ் அணி தனது காலிறுதிப் போட்டியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மொரோக்கோவை எதிர்கொள்ளவுள்ளது.
மறுபுறம் மெக்சிகோ அணிக்கு எதிரான 16 அணிகள் சுற்றின்போது இங்கிலாந்து பின்கள வீரர் ஜரல் குவன்சா சிவப்பு அட்டை பெற்ற நிலையில் அவர் மீதான தடையை இடைநிறுத்த பிஃபாவிடம் மேன்முறையீடு செய்வதற்கு இங்கிலாந்து கால்பந்து சம்மேளனமும் ஆலோசித்து வருகிறது. மெக்சிகோ பின்கள வீரரை அபாயகரமான முறையில் தடுத்ததற்காகவே குவன்சா சிவப்பு அட்டை பெற்றார். எனினும் அந்தப் போட்டியில் இங்கிலாந்து 3–2 என்ற கோல் கணக்கில் வென்று காலிறுதிக்கு முன்னேறியது.
இந்நிலையில் இங்கிலாந்து அணி தனது காலிறுதிப் போட்டியில் நோர்வேயை எதிர்கொள்ளவிருப்பதோடு அந்தப் போட்டியில் தடைக்கு உள்ளாகி இருக்கும் குவன்சாவை ஆடவைக்கும் முயற்சியிலேயே இங்கிலாந்து ஈடுபட்டுள்ளது.




