அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீடு

3 Min Read

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டங்களில் முன்வைக்கப்படும் அவசர பாலம், வீதி அல்லது கட்டிடப் புனரமைப்புப் பணிகளை, மத்திய அரசின் அனுமதிக்காகக் காத்திருந்து தாமதப்படுத்தாமல், நேரடியாக மாவட்டச் செயலாளர்கள் ஊடாக மேற்கொள்வதற்கு வாய்ப்பு கிடைக்கும் வகையில், அடுத்த வரவுசெலவுத் திட்டத்தில் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் தனித்தனி நிதி ஒதுக்கீட்டை வழங்கத் திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

மக்களின் அடிப்படைத் தேவைகளை விரைவாக நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

கொழும்பு மாவட்ட செயலகத்தில் இன்று (09) முற்பகல் நடைபெற்ற மாவட்ட செயலாளர்கள் மாநாட்டில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

பொதுச் சேவைகளை மிகவும் செயற்திறனாகவும் பயனுள்ளதாகவும் வழங்குவதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினரிடையே ஒருங்கிணைப்பை வலுப்படுத்துவதும், மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை ஆராய்ந்து, அதற்கான தீர்வுகளைப் பெற்று மாவட்ட மட்டத்திலான பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்துவதும் இந்த மாநாட்டின் நோக்கங்களாகும்.

அதேபோன்று, மாவட்ட அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம், அமைச்சுகளுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு, மாவட்ட மட்டத்தில் நிலவும் பிரச்சினைகளை இனங்கண்டு அவற்றுக்கு நடைமுறைச் சாத்தியமான தீர்வுகளை முன்மொழிதல் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் மற்றும் பொறுப்புக்களை ஒப்படைத்தல் ஆகியன இங்கு மேற்கொள்ளப்பட்டன.

மக்களின் உயிர்ப் பாதுகாப்பிற்காக, அதிக ஆபத்துள்ள பகுதிகளாக அடையாளம் காணப்பட்ட இடங்களில் மீண்டும் குடியேறுவதற்கு அனுமதிக்காதிருக்கவும், அத்தகைய பகுதிகளுக்கு மின்சாரம் மற்றும் நீர் போன்ற அடிப்படை வசதிகளுக்கான அனுமதியை வழங்காதிருக்கவும் பிரதேச செயலாளர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.

மத்திய மலைநாட்டின் முக்கியத்துவம் மிக்க நிலப்பரப்புகளை முகாமைத்துவம் செய்வதற்காக விசேட அதிகாரங்களைக் கொண்ட அதிகாரசபையொன்றை நிறுவும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும் ஜனாதிபதி வினவியதுடன், அதற்கான சட்டமூலம் தற்போது தயாரிக்கப்பட்டுள்ளதாகவும், அடுத்த வருடத்தில் புதிய அதிகாரசபையின் பணிகளைத் ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டது.

மேலும், யுத்தத்தினால் இடம்பெயர்ந்த மக்களின் வீட்டுப் பிரச்சினையை விரைவாகத் தீர்ப்பதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என வலியுறுத்திய ஜனாதிபதி, யுத்தத்தினால் இடம்பெயர்ந்த 13,000 குடும்பங்களை அடுத்த வருடத்தில் மீள்குடியேற்றுவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தொடர்ச்சியாக வெள்ளம் மற்றும் மண்சரிவுகளுக்கு உள்ளாகும் பகுதிகளில் வாழும் மக்களைப் பாதுகாப்பான வீடுகளில் குடியேற்றும் வேலைத்திட்டத்தை முறைப்படி நடைமுறைப்படுத்த வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

பல்வேறு காரணங்களினாலும் அரசியல் தேவைகளினாலும் முறையற்ற வகையில் ஆரம்பிக்கப்பட்டு, இடையில் கைவிடப்பட்டுள்ள வீடமைப்புத் திட்டங்கள் குறித்தும் இங்கு அவதானம் செலுத்திய ஜனாதிபதி, இது குறித்து விரைவான கணக்கெடுப்பொன்றை நடத்தி, மக்களுக்குத் தேவையான திட்டங்களை மாத்திரம் இனங்கண்டு, அவ்வீடுகளின் பணிகளை நிறைவு செய்வதற்காக வீட்டு உதவி வழங்கும் வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்துவது குறித்து அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அதேபோன்று, வீடுகள் மற்றும் ஏனைய கட்டுமானங்களின் போது முறையான திட்டமொன்றின் கீழ் செயற்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்திய ஜனாதிபதி, தென் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட முறையற்ற கட்டுமானங்கள் காரணமாகப் பல பிரச்சினைகள் எழுந்துள்ளதாகவும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் கட்டுமானங்களை முறையான திட்டமொன்றின் கீழ் மேற்கொள்ள வேண்டும் என்றும் சுட்டிக்காட்டினார்.

தேவையைக் கருத்திற்கொண்டு, இராணுவ முகாம்களின் கட்டுப்பாட்டிலுள்ள மக்களின் காணிகளை விடுவிக்கும் அதேவேளை, ஏனைய விசாலமான காணிகளை முதலீடுகளுக்காக வழங்குவதற்கும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும், பயிர்ச்செய்கை நடவடிக்கைகளுக்காகக் காணிகளை வழங்கும்போது வனவள மற்றும் வனஜீவராசிகள் வலயங்கள் பாதுகாப்படைவதை உறுதி செய்யும் வகையில் செயற்பட வேண்டியதன் அவசியத்தையும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

தரமான அரச சேவையொன்றிற்காக அரச துறையில் விரிவான மறுசீரமைப்பின் அவசியத்தை இங்கு வலியுறுத்திய ஜனாதிபதி, அரச சேவையின் செயல்திறனை அதிகரிப்பதற்காக செயற்திறனற்ற நிறுவனங்களை அகற்றுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும், சுகாதாரம், கல்வி உள்ளிட்ட அத்தியாவசிய துறைகளில் உள்ள வெற்றிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், சிறைச்சாலைகளில் நெரிசல் அதிகரிப்பதற்குக் காரணமாக அமைந்துள்ள இரசாயனப் பகுப்பாய்வாளர் அறிக்கை தாமதமாகும் பிரச்சினையைத் தவிர்ப்பதற்காக இரசாயனப் பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் வெற்றிடங்களை விரைவாக நிரப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி இங்கு சுட்டிக்காட்டினார்.

பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி பிரதி அமைச்சர் ருவன் செனரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் ஆலோக பண்டார உட்பட அமைச்சுகளின் செயலாளர்கள், அனைத்து மாவட்ட செயலாளர்கள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்ளிட்ட சிரேஷ்ட அரச அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

– ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *