பிஃபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றில் வெற்றி பெற்ற மொரோக்கோ மற்றும் பிரான்ஸ் அணிகள் காலிறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்த தெரிவாகியுள்ளன. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான அரையிறுதிக்கு முந்தைய சுற்றுப் போட்டி இலங்கை நேரப்படி எதிர்வரும் வெள்ளிக்கிழமை (10) அதிகாலை 1.30 இற்கு பொக்ஸ்பரோவில் நடைபெறவுள்ளது.
பிரான்ஸ் அணி இலங்கை நேரப்படி நேற்று (05) நடைபெற்ற 16 அணிகள் சுற்றில் பராகுவே அணியை 1–0 என்ற கோல் கணக்கில் போராடியே வென்றது. பிலடெல்பியாவில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல் இடம்பெற்றதால் பரபரப்பு அதிகரித்தது.
ஆட்டத்தின் முதல் பாதி முழுவதும் 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையிலும் பராகுவே வீரர்கள் கட்டுக்கோப்பான தற்காப்பை வெளிப்படுத்தினர். தொடரில் இதுவரை சிறப்பாக விளையாடி வந்த பிரான்ஸ் அணிக்கு தெளிவான கோல் வாய்ப்புகளை உருவாக்க முடியாமல் செய்தனர். இதனால் பிரான்ஸ் வீரர்கள் தொலைதூர உதைகளை மட்டுமே நம்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
எனினும் 70ஆவது நிமிடத்தில் போட்டியின் திருப்புமுனை ஏற்பட்டது. மாற்று வீரராக களமிறங்கிய டெசிரே டுவே, டியாகோ கோமேஸால் தடுக்கப்பட்பட்டார். வேண்டுமென்றே தன் கால் மூலம் அவர் காலினை மறிக்குமாறு செய்தார். இதனால் பிரான்ஸ் அணிக்கு பெனால்டி வாய்ப்பு கிடைத்தது. இதனை பயன்படுத்திக் கொண்ட கிலியன் எம்பாப்பே அமைதியாக பந்தை வலையின் கீழ் மூலையில் அனுப்பி கோல் அடித்தார். இதுவே பிரான்ஸின் வெற்றி கோலாக அமைந்தது.
இந்த கோலின் மூலம் இம்முறை உலகக் கிண்ணத்தில் தனது கோல்களின் எண்ணிக்கையை 7 ஆக உயர்த்திய அவர், மெஸ்ஸியுடன் தங்க பாதணி போட்டியில் முதலிடத்தில் உள்ளார்.
ரியல் மெட்ரிட் முன்கள வீரராக உள்ள எம்பாப்பே உலகக் கிண்ணத்தில் பெற்ற மொத்த கோல்களின் எண்ணிக்கை 19 ஆக அதிகரித்துள்ளது. இதன்படி லியோனல் மெஸ்ஸி 20 கோல்களை பெற்று உலகக் கிண்ணத்தில் அதிக கோல்கள் பெற்றவராக படைத்த சாதனையை எட்டுவதற்கு எம்பாப்பேவுக்கு ஒரு கோலே குறைவாக உள்ளது.
முன்னதாக ஹூஸ்டனில் நடைபெற்ற கனடாவுக்கு எதிரான 16 அணிகள் சுற்றுப் போட்டியில் மொரோக்கோ அணி ஆதிக்கம் செலுத்தியது. போட்டியின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் புகுத்தாத போதும் இரண்டாவது பாதியில் மத்திய கள வீரர் அஸதின் அவ்னாஹி இரட்டை கோல் பெற்றதோடு சுபியா ரஹிமி கடைசி நேரத்தில் மற்றொரு கோலை புகுத்தியதால் மொரோக்கோ அணி 3–0 என வெற்றியீட்டியது.
மொரோக்கோ 2022 உலகக் கிண்ணத்தில் முதல் ஆபிரிக்க அணியாக அரையிறுதி வரை முன்னேறிய நிலையில் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாகவே காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளைய போட்டிகள் (16 அணிகள் சுற்று)
மு.ப. 12.30 – ஸ்பெயின் எதிர் போர்த்துக்கல், ஆர்லிங்கடன்
மு.ப. 5.30 – பெல்ஜியம் எதிர் அமெரிக்கா, சியாட்டில்
பி.ப. 9.30 – எகிப்து எதிர் ஆர்ஜன்டீனா, அட்லாண்டா




