படுகொலை செய்யப்பட்ட ஈரான் உயர்மட்ட தலைவர் ஆயதொல்லா அலி கமெனே மற்றும் மேலும் நான்கு குடும்ப உறுப்பினர்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு மற்றும் தொழுகையில் அவரது மூன்று மகன்மார் பங்கேற்றபோதும் புதிய உயர்மட்ட தலைவராக நியமிக்கப்பட்ட அவரது மற்றொரு மகனான மொஜ்தபா இந்த நிகழ்வில் இன்னும் பங்கேற்கவில்லை.
டெஹ்ரானில் உள்ள இமாம் கொமைனி கிரான்ட் மொசல்லா எனும் சமய வளாகத்தில் வைக்கப்பட்ட உயமட்டத் தலைவரின் உடல் அடங்கிய சவப்; பெட்டிக்கு முன்னால் நின்று மொஸ்தபா, மெய்தாம் மற்றும் மசூத் கமெனே ஆகியோர் தொழும் காட்சியை ஈரானின் அரச தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் போரை ஆரம்பித்து நடத்திய வான் தாக்குதலில் இவர்களின் தந்தையுடன் சேர்த்து குடும்ப உறுப்பினர்கள் பலரும் கொல்லப்பட்டனர். பல வாரங்கள் நீடித்த இந்த மோதல் காரணமாக பிராந்தியத்தில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
உயர்மட்ட தலைவர் படுகொலை செய்யப்பட்டு நான்கு மாதங்களின் பின்னரே இறுதிச் சடங்கு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. ஒரு வார காலம் இடம்பெறும் இந்த நிகழ்வில் இறுதி ஊர்வலங்களுடன் உயர்மட்டத் தலைவரின் உடல் அண்டை நாடான ஈராக் உட்பட ஷியா மதத் தலங்களுக்கும் எடுத்துச் செல்லப்படுகிறது.
மூத்த ஈரானிய தலைவர்களும் வெளிநாட்டு அதிகாரிகளும் அஞ்சலி செலுத்துவதற்காக ஒரு நாள் முழுவதும் உட்புறத்தில் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்த பின்னர், கடந்த சனிக்கிழமையன்று கமெனேவின் சவப்பெட்டி கண்ணாடி உறைக்குள் வெளிப்புறத்தில் காட்சிப்படுத்தப்பட்டது. அவருடன் அவரது மகள், மருமகன், மருமகள் மற்றும் 14 மாத பேத்தியின் சவப்பெட்டிகளும் வைக்கப்பட்டிருந்தன.
எனினும் புதிய உயர்மட்டத் தலைவர் மொஜ்தபாவை பொதுவெளியில் காண்பதற்கு கிடைக்கவில்லை என்பதோடு அவரது புகைப்படங்கள் கூட வெளியாகவில்லை. தந்தை மற்றும் குடும்பத்தினர் கொல்லப்பட்ட பெப்ரவரி 28 ஆம் திகதிய தாக்குதலில் மொஜ்தபாவும் காயமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.
மொஜ்தபா கமெனேவின் முகம் கடுமையாக சிதைந்திருந்ததுடன், அவரது ஒரு காலிலோ அல்லது இரு கால்களிலுமோ தீவிரமான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக, அவருக்கு நெருக்கமான வட்டாரங்களை மேற்கோள் காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டிருந்தது. இறுதிக் கிரியையின்போது புதிய உயர்மட்ட தலைவரை காணக் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அந்த இறுதிக் கிரியையில் பங்கேற்ற ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.
‘தொழுகை நடக்கும் இறுதி நேரம் வரை அவர் (மொஜ்தபா கமெனே) வருவார் என்று என்னைச் சுற்றி இருந்தவர்களிடம் கூறிக்கொண்டிருந்தேன். அது தான் எமது ஒரே விருப்பமாக இருந்தது’ என்று இளம் பெண் ஒருவர் அரச சார்பு தஸ்னிம் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார்.
நான்கு மாதங்கள் நீடித்த போரை நிறுத்தம் வகையில் அமெரிக்கா, ஈரான் இடையே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று எட்டப்பட்டதோடு போர் நிறுத்தம் ஒன்று அமுலில் உள்ளது. இந்த உடன்படிக்கை பொருளாதார ரிதியில் நன்மை பயப்பதாக குறிப்பிடும் ஈரான் நிர்வாகம், வல்லரசுக்கு எதிரான வெற்றியாகவும் கூறி வருகிறது.
இறுதிச் சடங்கையொட்டி அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஒரு வாரத்திற்கு நிறுத்தப்பட்டிருப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், எக்சியோஸ் செய்தி இணையதளத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
உயர்மட்ட தலைவரின் சவப் பெட்டிக்கு முன்னால் இருந்து ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியான் மற்றும் பாராளுமன்ற சபாநாயகர் முஹமது பக்கர் கலிபப் தொழுகையில் ஈடுபட்டனர். இமாம் தொழுகையை நடத்திக் கொண்டிருந்தபோது மசூத் கமெனே கண்ணீர்விட்டு அழுவதை காணமுடிந்தது. இதன்போது அவர் ஈரானில் புரட்சிகர போராட்ட உணர்வுகளின் சின்னமாகவும், பலஸ்தீனர்களுடனான ஒற்றுமையை வெளிப்படுத்தும் அடையாளமாகவும் கருதப்படுகிறது கெஃபியே துணியால் கண்ணீரை துடைப்பதையும் காணமுடிந்தது.
இறுதிக் கிரியையில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான மக்கள் அழுதபடியும், தமது கைகளால் மார்பில் அடித்தபடியும் கவலையை வெளிப்படுத்தினர். இறுதிக் கிரியை இடம்பெறும் மத்திய டெஹ்ரானுக்கு கடந்த சனிக்கிழமை இரவு தொடக்கம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வரை 7 மில்லியன் பயணங்கள் பதிவானதாக ஈரானின் மெட்ரோ ரயில் வலையமைப்பு குறிப்பிட்டுள்ளது.
உயர்மட்டத் தலைவரின் உடல் இன்று (06) ஈரானின் ஷியா மத மையமாக உள்ள கொம் நகருக்கு எடுத்துச் செல்லப்படவுள்ளது. அங்கிருந்து, உடல் ஷியா மதத்தின் புனித தலங்களான நஜஃப் மற்றும் கர்பலா நகரங்களில் எதிர்வரும் புதன்கிழமை நடைபெறவுள்ள சடங்குகளுக்காக ஈராக்கிற்கு விமானம் மூலம் கொண்டு செல்லப்படும். பின்னர் எதிர்வரும் வியாழக்கிழமை அது மீண்டும் ஈரானுக்கு கொண்டு வரப்பட்டு, மற்றொரு ஊர்வலத்திற்காக மஷாத் நகரில் காட்சிப்படுத்தப்படும்.
ஈரானின் வடகிழக்கு நகரமான மஷாத்தில் உள்ள எட்டாவது ஷியா இமாம் ஆன இமாம் ரேஸாவின் திருத்தலத்தில் கமெனே உடல் அடக்கம் செய்யப்படவுள்ளது.




