இந்திய 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணிக்கு எதிரான முதலாவது உத்தியோகபூர்வமற்ற ஒருநாள் போட்டியில் இலங்கை இளையோர் அணி 120 ஓட்டங்களால் தோல்வியை சந்தித்தது.
பாண்டிச்சேரியில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற இந்தப் போட்டியில் இந்திய இளையோர் அணி நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடி 50 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 279 ஓட்டங்களை பெற்றது.
ஆரம்ப வீராங்கனை இரா ஜாதவ் அதிகபட்சமாக 83 ஓட்டங்களை பெற்றார். இலங்கை இளையோர் அணிக்காக சுழல் வீராங்கனை சமோதி ஹேரத் 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு சமுதி பிரபோதா 2 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
எனினும் பதிலெடுத்தாடிய இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட அணி 48.5 ஓவர்களில் 159 ஓட்டங்களுக்கே சுருண்டது. மனுதி நாணயக்கார அதிகபட்சம் 47 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இந்திய இளையோர் அணி 1–0 என முன்னிலை பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது போட்டி நாளை (03) இதே பாண்டிச்சேரியில் நடைபெறும்.




