மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தி இறுதிக்கு முன்னேறியது ஆஸி

1 Min Read

மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் தனது ஆதிக்கத்தை நிரூபித்த அவுஸ்திரேலிய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் 8 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

லண்டன், கனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்று முன்தினம் (30) நடைபெற்ற அரையிறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட மேற்கிந்திய தீவுகள் மகளிர் அணியை 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 125 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த முடிந்தது. குறிப்பாக ஆஸி. சுழல் வீராங்கனைகளான சொபி மொலினிக்ஸ், ஆஷ்லி காட்னர் மற்றும் ஜோர்ஜியா வெர்ஹம் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலெடுத்தாட வந்த அவுஸ்திரேலிய அணிக்கு அனுபவ ஆரம்ப வீராங்கனையான பேத் மூனி 36 பந்துகளில் 8 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 61 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் அந்த அணி 13 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

இதுவரை நடைபெற்ற ஒன்பது மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டிகளில் ஆஸி. அணி ஏழு முறை இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருப்பதோடு அதில் ஆறு தடவைகள் கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை லண்டன், லோட்ஸ் மைதானத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலிய அணி இங்கிலாந்து அல்லது தென்னாபிரிக்க அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்த இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி இதே ஓவல் மைதானத்தில் இன்று (02) நடைபெறவுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *