இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் நான்கு நாள் போட்டிகளுக்கான இலங்கை இளையோர் குழாம்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில் இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட ஒருநாள் அணிக்கு யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் குகதாஸ் மாதுலன் அழைக்கப்பட்டிருப்பதோடு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுழல் வீரர் விக்னேஷ்வரன் ஆகாஷ் இரண்டு வகை போட்டிகளுக்குமான இலங்கை அணியில் இடம்பெற்றுள்ளார்.
இலங்கை இளையோர் அணிக்கு தலைவராக கொழும்பு, றோயல் கல்லூரியின் விமத் தின்சர செயற்படவிருப்பதோடு உப தலைவராக கண்டில், கிங்ஸ்வுட் கல்லூரியின் கவீஜ கமகே தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
இலங்கை மற்றும் இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிகளுக்கு இடையிலான மூன்று ஒருநாள் போட்டிகளும் ஹம்பாந்தோட்டையில் எதிர்வரும் ஜூலை 4, 6 மற்றும் 9 ஆம் திகதிகளில் நடைபெறும். இதனைத் தொடர்ந்து இரு அணிகளும் ஆடும் இரு நான்கு நாள் போட்டிகளின் முதல் ஆட்டம் காலியில் ஜூலை 13 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதன் இரண்டாவது போட்டி கொழும்பு, ஆர். பிரேமதாச மைதானத்தில் ஜூலை 20 ஆம் திகதி ஆரம்பமாகும்.
இந்தத் தொடரில் ஆடுவதற்கான இந்திய இளையோர் அணி கடந்த செவ்வாயன்று (30) இலங்கை வந்தமை குறிப்பிடத்தக்கது.




