நெதர்லாந்தை வீழ்த்தி மொரோக்கோ 16 அணிகள் சுற்றுக்கு முன்னேற்றம்

2 Min Read

நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற ஜெர்மனியை பெனால்டி சூட் அவுட்டில் வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்த பராகுவே அணி பிஃபா உலகக் கிண்ண 16 அணிகள் சுற்றுக்கு முன்னேறியதோடு மொரோக்கோ அணியும் நெதர்லாந்தை வென்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளது.

பிரேசில் அணி தனது 32 அணிகள் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டி அடுத்த சுற்றுக்கான தனது இடத்தை உறுதி செய்துள்ளது.

இதில் அமெரிக்காவின் பொக்ஸ்பொரோவில் இலங்கை நேரப்படி நேற்று நடைபெற்ற போட்டியில் ஜெர்மனிக்கு எதிராக சரிக்கு சமமாக ஆடிய பராகுவே 120 நிமிடங்கள் முடிவில் 1–1 என சமன் செய்தது. பின்னர் நடந்த பெனால்டி சூட் அவுட்டில் பராகுவே அணி 4–3 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது.

ஜெர்மனி அணி உலகக் கிண்ணத்தில் பெனால்டி ஷூட் அவுட்டில் தோல்வியுறுவது இது முதல்முறை என்பதோடு அந்த அணி 2014 இல் கடைசியாக உலகக் கிண்ணத்தை வென்ற பின்னர் தொடர்ச்சியாக 16 அணிகள் சுற்றுக்கு, முன்னேறத் தவறியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்தப் போட்டியில் வென்ற பராகுவே 16 அணிகள் சுற்றில் எதிர்வரும் ஜூலை 4 ஆம் திகதி பிரான்ஸ் அல்லது சுவீடனை எதிர்கொள்ளவுள்ளது. இதேவேளை கடந்த முறை உலகக் கிண்ண அரையிறுதி வரை முன்னேறிய மொரோக்கோ தனது 32 அணிகள் சுற்றில் நெதர்லாந்தை 3–2 என பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்தியது. மேலதிக நேரம் வரை சென்ற போட்டி 1–1 என சமநிலை பெற்றதை அடுத்தே ஆட்டம் பெனால்டி முறையில் தீர்மானிக்கப்பட்டது.

இதில் மொரோக்கோ அணி தாக்குதல் பாணி ஆட்டத்தை ஆட, அதனை தடுத்து ஆடியது நெதர்லாந்து. முதல் பாதி ஆட்டம் கோல் ஏதுமின்றி நிறைவடைந்தது. அதன் பின்னர் இரண்டாவது பாதியின் 72ஆவது நிமிடத்தில் நெதர்லாந்து அணிக்காக கோல் பதிவு செய்தார் கோடி கேக்போ. அதன் மூலம் 1-0 என நெதர்லாந்து முன்னிலை பெற்றது. ஆட்டத்தை வென்று விடும் நோக்கத்தில் தடுப்பாட்டத்தில் தீவிரமாக இருந்தது நெதர்லாந்து. இருப்பினும் ஸ்டொப்பேஜ் நேரத்தின் 90+ 1 ஆவது நிமிடத்தில் கோல் பதிவு செய்தார் மொராக்கோவின் இஸ்ஸா. இதனால் ஆட்டம் 1-1 என சமநிலை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி ஹூஸ்டனில் எதிர்வரும் சனிக்கிழமை (04) நடைபெறும் 16 அணிகள் சுற்றுப் போட்டியில் மொரோக்கோ அணி கனடாவை எதிர்கொள்ளவுள்ளது.

ஐந்து முறை சம்பியனான பிரேஸில் அணி ஹூஸ்டனில் நடந்த 32 அணிகள் சுற்றில் ஜப்பானுக்கு எதிராக கடைசி நேரத்தில் வெற்றி கோலை புகுத்தியது. போட்டியின் முதல் பாதியில் கைஷு சனோ கோல் புகுத்தி முன்னிலை பெற்றபோதும் பிரேசில் அணி இரண்டாவது பாதியில் இரு கோல்களை பெற்று முன்னிலையை எட்டியது.

பிரேசில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (05) ஐவரிகோஸ்ட் அல்லது நோர்வே அணியை எதிர்கொள்ளவுள்ளது.

நாளைய போட்டிகள்

மு.ப. 1.30 – பெல்ஜியம் எதிர் செனகல், சியாட்டில்

மு.ப. 5.30 – அமெரிக்கா எதிர் பொஸ்னியா ஹெர்சகோவினா, சான்டா கிளாரா

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *