அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2028 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் விளையாட்டும் உள்ளடக்கப்பட்டிருக்கும் நிலையில் அதற்காக சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் அறிமுகம் செய்திருக்கும் தகுதிகாண் முறையின்படி இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் அணிகளுக்கும் ஒலிம்பிக் செல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
லொஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக்கில் தலா ஆறு ஆடவர் மற்றும் மகளிர் டி20 கிரிக்கெட் அணிகள் பங்கேற்கவிருப்பதாக ஐ.சி.சி. கடந்த திங்கட்கிழமை (29) அறிவித்தது. இதில் இரு பிரிவுகளிலும் தலா ஐந்து அணிகள் நேரடித் தகுதி பெறுவதோடு மற்ற ஓர் இடத்திற்காக 2027 இல் எட்டு அணிகள் பங்கேற்கும் ஐ.சி.சி. ஒலிம்பிக் தகுதிகாண் போட்டி நடத்தப்படவுள்ளது.
ஆடவர் பிரிவில், 2026 டிசம்பர் 31 ஆம் திகதிக்கு ஆபிரிக்கா, ஆசியா, ஐரோப்பா மற்றும் ஒசியானியா பிராந்தியங்களில் ஐ.சி.சி. தரவரிசையில் உச்ச தரநிலையை பெற்றிருக்கும் அணிகள் ஒலிம்பிக்கில் ஆட நேரடி தகுதி பெறும். போட்டியை நடத்தும் அமெரிக்காவும் 2026 முடிவில் டி20 தரவரிசையில் முதல் 15 இடங்களுக்குள் வந்தால் ஒலிம்பிக் வாய்ப்பை உறுதி செய்ய முடியும்.
இலங்கை அணி தற்போது ஐ.சி.சி. டி20 தரவரிசையில் ஆறாவது இடத்தில் உள்ளது. எவ்வாறாயினும் ஆசிய பிராந்தியத்தில் இந்திய அணி இலங்கையை விட முன்னிலையில் உள்ளது. எனவே நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் இலங்கை அணியால் இந்தியாவை பின்தள்ள முடியாவிட்டால் நேரடி தகுதியை பெற வாய்ப்பு இல்லை.
மகளிர் பிரிவில் தற்போது நடைபெற்று வரும் மகளிர் டி20 உலகக் கிண்ணத்தில் வெளியிட்ட திறமை அடிப்படையில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் ஏற்கனவே ஒலிம்பிக்கிற்கு நேரடி தகுதியை உறுதி செய்துள்ளன.
மகளிர் டி20 தரவரிசையில் இலங்கை தற்போது ஆறாவது இடத்தில் உள்ளது. எனவே ஆசிய பிராந்தியத்தில் நேரடி தகுதி வாய்ப்பை இந்தியாவிடம் இழந்துள்ளது.
எவ்வாறாயினும் இலங்கை ஆடவர் மற்றும் மகளிர் இரு அணிகளுக்கும் 2027 ஐ.சி.சி. ஒலிம்பிக் தகுதிகாண் சுற்றில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகுதிகாண் தொடரில் வெற்றியீட்டும் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.
1900 ஆம் ஆண்டுக்கு பின்னரே ஒலிம்பிக் போட்டியில் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. போட்டிகள் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பொமோனா மைதானத்தில் நடைபெறவுள்ளது.




