சாதனை இணைப்பாட்டத்தால் இலங்கை அணி போராட்டம்

1 Min Read

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதலாது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்க்க வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாகி இருந்தது.

அன்டிகுவா, நோர்த் சௌண்டில் நடைபெறும் இந்த டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளான நேற்று முன்தினம் (27) தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த இலங்கை அணி இன்னிங்ஸ் தோல்வி ஒன்றை தவிர்ப்பதற்கு 318 ஓட்டங்களைப் பெற வேண்டி இருந்தது. அன்றைய நாள் ஆட்டநேர முடிவின்போது இலங்கை அணி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை இழந்திருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் சார்பில் அமிர் ஜங்கு (233) மற்றும் அணித் தலைவர் ரொஸ்டன் சேஸ் (194) ஆறாவது விக்கெட்டுக்காக பெற்ற 401 ஓட்ட இணைப்பாட்டத்தின் மூலம் மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்புக்கு 629 ஓட்டங்களைப் பெற்றது.

இதில் ஜங்கு மற்றும் ரொஸ்டன் சேஸ் பெற்ற இணைப்பாட்டம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 6ஆவது அல்லது அதற்கு கீழுள்ள விக்கெட்டுக்காக பெறப்பட்ட அதிகூடிய இணைப்பாட்டமாக சாதனை படைத்தது. இதன்போது 2016 இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்தின ஜொன்னி பெஸ்டோ மற்றும் பென் ஸ்டொக்ஸ் ஆறாவது விக்கெட்டுக்காக பெற்ற 399 ஓட்ட இணைப்பாட்டத்தையே இந்த ஜோடி முறியடித்தது.

அத்துடன் இந்த இணைப்பாட்டம் மேற்கிந்திய தீவுகள் சார்பில் பெறப்பட்ட இரண்டாவது அதிகூடிய இணைப்பாட்டமாகவும் அமைந்தது. 1958 இல் பாகிஸ்தானுக்கு எதிராக கொன்ராட் ஹன்ட் மற்றும் கெரி சோபர்ஸ் இரண்டாவது விக்கெட்டுக்கு பெற்ற 446 ஓட்ட இணைப்பாட்டமுமே இதன் முதல் இடத்தில் உள்ளது.

இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி தனஞ்சய டி சில்வாவின் (120) சதத்துடன் முதல் இன்னிங்ஸில் 308 ஓட்டங்களை பெற்றமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *