வெளிநாடுகளில் பதுங்கியிருக்கும் 96 பெருங்குற்றவாளிகள் நாட்டுக்கு கொண்டுவரப்படுவர்

1 Min Read

பயங்கர குற்றச் செயல்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டு, தற்போது வெளிநாடுகளுக்குத் தப்பியோடி பதுங்கியிருக்கும் 94 நபர்களில் 37 பேர் அடையாளம் காணப்பட்டிருப்பதாகவும் அவர்கள் விரைவில் நாடு கடத்தப்பட்டு, இலங்கைக்குக் கொண்டு வரப்படுவார்கள் எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இத்தகவலை வெளியிட்ட அமைச்சர், 232 சிவப்பு அறிவித்தல்களை விடுக்க இன்டர்போல் இணங்கியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இக் குற்றவாளிகள் எங்கே இருக்கிறார்கள் என்பதைப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். கடந்த 20 மாதங்களில் 23 குற்றவலையமைப்பை வைத்திருந்த சந்தேக நபர்கள் நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். மேலும் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்படாத 35 நபர்கள் கொண்டு வரப்பட்டுள்ளனர். மொத்தமாக 58 பேரை இந்த அரசாங்கம் அழைத்து வந்திருக்கிறது. சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்ட 96பேர் தற்போது ஐக்கிய அரபு அமீரகம், இந்தியா, மலேசியா, இங்கிலாந்து, பிரான்ஸ், கனடா, ரஷ்யா, இத்தாலி, சவூதி அரேபியா ஆகிய நாடுகளில் பதுங்கியுள்ளனர். இவர்கள் விரைவிலேயே சுற்றி வளைக்கப்பட்டு திரும்ப அழைத்து வரப்படுவார்கள் என அமைச்சர் மேலும் தெரிவித்திருந்தார். பதுங்கியிருக்கும் இச் சந்தேக நபர்களின் இரண்டாவது மற்றும் மூன்றாவது உள்ளூர் வலையமைப்புகளையும் பொலிஸார் தற்போது அடையாளம் கண்டுள்ளனர். இவ்வலையமைப்புகள் மூலமே அவர்கள் போதைப்பொருள் கடத்தல் மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுகின்றனர்.

மத்திய கிழக்கு நாடுகளிலிருந்த பெரும்பாலான குற்றவலையமைப்புகள் இங்கே இயக்கப்படுகின்றன. உள்ளூரில் இயங்கும் இந்த வலையமைப்புகளை கண்டறிந்து அவர்கள் இதுவரை திரட்டியிருக்கும் சொத்துகளை முடக்குவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பதையும் அமைச்சர் தனது உரையில் சுட்டிக் காட்டினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *