இலங்கை கிரிக்கெட்டின் புதிய யாப்பு விரைவில் பாராளுமன்றில் சமர்ப்பிப்பு

2 Min Read

இலங்கை கிரிக்கெட் முன்மொழியப்பட்டிருக்கும் புதிய யாப்பை தயாரிப்பது இந்த மாதத்தில் நிறைவு செய்து விரைவாக பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கிரிக்கெட் சீர்திருத்தக் குழு தலைவர் எரான் விக்ரமரத்ன குறிப்பிட்டுள்ளார். பாராளுமன்றத்திற்கு முன்வைப்பதற்கு முன்னதாக சட்டவரைஞர் திணைக்களம் மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் இடைக்கால சபையான சீர்திருத்தக் குழு உறுப்பினர்கள் இலங்கை கிரிக்கெட் தலைமையகத்தில் நேற்று (25) நடத்திய ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்தனர்.

ஐ.சி.சி கடிதம் ஒன்றின் மூலம் தேர்தலை நடத்த வேண்டிய கால வரம்பு ஒன்று தரப்படவில்லை என்றும், அது தொடர்பில் எந்தவொரு கடிதமும் கிடைக்கவில்லை என்றும் செயலாளர் பிரகாஷ் ஷாப்டர் சுட்டிக்காட்டினார்.

‘எந்தவொரு கடிதம் ஒன்றும் எமக்கு கிடைக்கவில்லை. அவ்வாறான செய்திகளை நிராகரிக்கிறேன். பேச்சுவார்த்தைகளில் இடம்பெற்றவற்றை ஊடக அறிக்கை மூலம் தெளிவுபடுத்தி இருக்கிறோம்’ என்று ஷாப்டர் கூறினார். கடந்த வாரம் இலங்கை வந்த ஐ.சி.சி. தலைவர் ஜே ஷாவுக்கும் சீர்திருத்தக் குழுவுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை வெற்றி அளித்ததாக அவர் கூறினார். புதிய யாப்பில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாகவும் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்கா உட்பட ஐ.சி.சி. மற்றும் முன்னணி கிரிக்கெட் சபைகளினால் பயன்படுத்தப்படும் நிர்வாகக் கட்டமைப்பை ஆய்வு செய்த பின் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

‘எமது குழு, நாம் செல்லும் பாதை தொடர்பில் ஐ.சி.சி. இற்கு தெளிவுபடுத்தியது. அந்தப் பேச்சுவார்த்தை வெற்றி அளிப்பதாக இருந்தது. நாம் வந்திருப்பது குறுகிய காலத்திற்காகும். இந்த முறையை மாற்றும்படி எம்மிடம் கோரப்பட்டிருக்கிறது. நாம் வந்து 7 வாரங்களாகும். எமது யாப்பு மாற்றப்பட வேண்டிய முறை தொடர்பில் முன்மொழிவுகளை கிரிக்கெட் சமூகம் அதனுடன் தொடர்புபட்ட சங்கங்களிடம் இருந்து பெற்றோம்.

சர்வதேச தரத்திலான ஆலோசனைகளை பெற ஐ.சி.சி.இன் முன்னாள் சட்ட ஆலோசகர் டேவிட் பெக்கரிடம் முன்வைத்தோம். இந்த மாதத்தை நிறைவு செய்து பாராளுமன்றத்திற்கு கொண்டுசெல்வோம். பாராளுமன்ற முறை ஒன்று உள்ளது. அது நிறைவேற்றப்பட்ட பின் புதிய கிரிக்கெட் யாப்பு நடைமுறைக்கு வரும்’ என்று எரான் விக்ரமரத்ன தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *