சமரியின் சதத்தால் இலங்கைக்கு தொடர்ந்தும் அரையிறுதி வாய்ப்பு

2 Min Read

சமரி அத்தபத்துவின் அதிரடி சதத்தின் மூலம் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் 9 விக்கெட்டுகளால் இலகு வெற்றியீட்டிய இலங்கை அணி மகளிர் டி20 உலகக் கிண்ணத்தின் அரையிறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை தொடர்ந்து தக்கவைத்துள்ளது.

பிரிஸ்டல், கௌண்டி மைதானத்தில் நேற்று முன்தினம் (23) நடைபெற்ற இந்தப் போட்டியில் வெற்றியீட்டியதன் மூலம் இலங்கை மகளிர் அணி குழு 2 இன் புள்ளிப்பட்டியலில் 4 போட்டிகளில் 2 வெற்றி 2 தோல்விகளுடன் 4 புள்ளிகளைப் பெற்று 4 ஆவது இடத்தில் உள்ளது. இந்நிலையில் அரையிறுதி வாய்ப்பை தக்கவைக்க நாளை (26) மான்செஸ்டரில் நடைபெறும் ஸ்கொட்லாந்துக்கு எதிரான தனது கடைசி குழு நிலைப் போட்டியில் இலங்கை அணி கட்டாயம் வெல்ல வேண்டும்.

அத்துடன் மற்ற போட்டிளும் தனக்கு சாதகமாக முடிந்தாலேயே நொக் அவுட் போட்டியில் ஆடுவது சாத்தியமாகும்.

இதில் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அயர்லாந்து அணிக்கு இலங்கை பந்து வீச்சாளர்கள் ஆரம்பம் தொட்டே நெருக்கடி கொடுத்தனர்.

ஆரம்ப வீராங்கனை எமி ஹன்டர் பூஜ்யத்திற்கு வெளியேறிய நிலையில் அடுத்து வந்த ஓர்லா பிரன்டர்கஸ்டும் டக் அவுட் ஆகியார்.

எனினும் மறுமுனையில் ஆடிய அணித் தலைவி கெபி லுவிஸ் 50 பந்துகளில் பெற்ற 59 ஓட்டங்களும் நெருக்கடியை தவிர்க்க உதவியது. 20 ஓவர்கள் முடிவில் அயர்லாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து 130 ஓட்டங்களையே பெற்றது.

இந்நிலையில் பதிலெடுத்தாட வந்த இலங்கை அணி அரையிறுதி வாய்ப்பை தக்கவைப்பதற்கு நிகர ஓட்ட விகிதத்தையும் அதிகரிக்க வேண்டிய நிலையில் சமரி அத்தபத்துவின் அதிரடி ஆட்டம் அதற்கு உதவியது. அவர் 61 பந்துகளில் 17 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 106 ஓட்டங்களை விளாசினார்.

அத்தபத்து டி20 சர்வதேச போட்டிகளில் பெறும் நான்காவது சதம் இதுவென்றபோதும் உலகக் கிண்ணத்தில் பெற்ற முதல் சதமாக அமைந்தது. இந்த ஆட்டத்தின் மூலம் இலங்கை மகளிர் அணி 15.3 ஓவர்களிலேயே ஒரு விக்கெட்டை மாத்திரம் இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது.

எனினும் அயர்லாந்து அணி இதுவரை ஆடிய 21 உலகக் கிண்ண போட்டிகளில ஒன்றில் கூட வென்றதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *