ஆறு உலகக் கிண்ண தொடர்களில் கோல் பெற்ற முதல் வீரராக ரொனால்டோவின் சாதனையுடன் அவரது இரட்டை கோல் மூலம் உஸ்பகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய போர்த்துக்கல் அணி பிஃபா உலகக் கிண்ணத்தின் நொக் அவுட் சுற்றுக்கான வாய்ப்பை நெருங்கியுள்ளது.
ஹூஸ்டனில் கே குழுவுக்காக நடைபெற்ற போட்டி ஆரம்பித்த ஆறாவது நிமிடத்திலேயே 41 வயது ரொனால்டோ கோல் புகுத்தினார். இந்த கோல் மூலமே அவர் புதிய சாதனையை படைத்தார். ரொனால்டோ இதற்கு முன்னர் 2006, 2010, 2014, 2018 மற்றும் 2022 உலகக் கிண்ணங்களிலும் கோல் பெற்றுள்ளார். அத்துடன் ரொனால்டோவின் இந்த கோல் மூலம் அவர் உலகக் கிண்ணத்தில் கோல் பெற்ற இரண்டாவது அதிக வயதான வீரராக பதிவானார். இதில் கெமரூன் நாட்டின் ரொஜர் மில்லா முதலிடத்தில் உள்ளார். அவர் 1994 இல் ரஷ்யாவுக்கு எதிராக தனது 42 வயதில் கோல் பெற்றிருந்தார்.
கொங்கோவுக்கு எதிரான முதல் போட்டி 1–1 என்ற கோல் கணக்கில் சமநிலை பெற்றதால் கட்டாய வெற்றியை எதிர்பார்த்தே முதல்முறை உலகக் கிண்ணத்தில் களமிறங்கி இருக்கும் உஸ்பகிஸ்தானை போர்த்துக்கல் எதிர்கொண்டது.
எனினும் போட்டியின் 39 ஆவது நிமிடத்திலும் ரொனால்டோ மற்றொரு கோலை புகுத்தியதோடு நுனோ மென்டஸ் 17 ஆவது நிமிடத்தில் பெற்ற கோலினால் போர்த்துக்கல் முதல் பாதியிலேயே 3–0 என முன்னிலை பெற்றது. இரண்டாவது பாதியிலும் அந்த அணியின் ஆதிக்கம் தொடர்ந்ததால் போட்டியை 5–0 என வெல்ல முடிந்தது.
இதேவேளை கே குழுவுக்காக இலங்கை நேரப்படி நேற்று (24) நடைபெற்ற மற்றப் போட்டியில் கொங்கோ அணியை 1–0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய கொலம்பியா அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
எனினும் இங்கிலாந்து அணி கானாவுக்கு எதிரான போட்டியை கோலின்றி சமநிலை செய்தது அந்த அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. பொஸ்டனில் எல் குழுவுக்காக நடைபெற்ற இந்தப் போட்டியில் கானாவின் தற்காப்பு அரணை இங்கிலாந்தால் கடைசி வரை முறியடிக்க முடியாமல் போனது.
இங்கிலாந்து தனது முதல் போட்டியில் கேராசியாவை வீழ்த்திய நிலையில் எல் குழுவில் முதல் இடத்தில் நீடித்தபோதும் 32 அணிகள் சுற்றுக்கு முன்னேற பனாமாவுக்கு எதிராக வரும் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெறும் போட்டியில் தோல்வியை தவிர்ப்பது முக்கியமாக அமையும்.
மறுபுறம் எல் குழுவுக்காக நேற்று நடந்த மற்றப் போட்டியில் பனாமாவை 1–0 என்ற கோல் கணக்கில் குரோஷியா தோற்கடித்தது.




