போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஆரம்பக் கட்ட அமைதி உடன்படிக்கையில் அமெரிக்க மற்றும் ஈரான் ஜனாதிபதிகள் கைச்சாத்திட்டதை அடுத்து அந்த உடன்படிக்கை உடன் அமுலுக்கு வந்துள்ளது.
செய்துகொள்ளப்பட்டிருக்கும் உடன்படிக்கையில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பது, ஈரானின் ‘மீள் கட்டுமானத்திற்கான’ 300 பில்லியன் டொலர் திட்டம் மற்றும் ஈரான் மீதான அனைத்து வகையான தடைகளையும் அமெரிக்கா நீக்குவது போன்ற அம்சங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன.
எனினும் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா போர் தொடுப்பதற்கு பிரதான காரணமாக இருந்த ஈரானின் அணுத் திட்டம் தொடர்பான விவகாரத்தை பேச்சுவார்த்தை மூலம் தீர்ப்பதற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. இது தொடர்பான பேச்சுவார்த்தை அடுத்த 60 நாட்கள் தொடரவுள்ளது.
பிரான்ஸில் ஜி7 மாநாட்டில் பங்கேற்றிருக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கடந்த புதன்கிழமை (17) இந்த உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்த உடன்படிக்கை பொருளாதார பேரழிவு ஒன்றை தடுக்கும் என்று அதனை காத்துப் பேசினார். எனினும் இறுதி உடன்படிக்கை ஒன்று எட்டப்படாத பட்சத்தில் ஈரான் மீது கடுமையான குண்டுவீச்சு நடத்தப்படும் என்றும் எச்சரித்தார்.
ஈரான் ஜனாதிபதி மசூத் பெசஷ்கியானும் கடந்த புதனன்று இந்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டதை அந்த நாடு உறுதி செய்துள்ளது. ஈரான் பாராளுமன்ற சபாநாயகரும் முக்கிய பேச்சுவார்த்தையாளருமான முஹமது பகர் கலிபப், அமெரிக்கா தொடர்பில் தொடர்ந்து அவதானத்துடக் இருப்பதாகவும், எப்போது வேண்டுமானாலும் பதிலடி கொடுக்கத் தயாராக இருப்பதாகவும் எச்சரித்துள்ளார்.
‘தர்க்க ரீதியான மொழி எதிரிகளுக்கு இன்னும் புரியாவிட்டால், அதிகாரத்தின் மொழியை நாம் மீண்டும் கையில் எடுப்போம்’ என்று அவர் ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டார். கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்த முதல் நாளிலேயே ஈரான் உயர்மட்டத் தலைவர் மற்றும் முன்னணி இராணுவ தளபதிகள் கொல்லப்பட்டனர். இதனை அடுத்து பிராந்தியம் முழுவதும் இந்தப் போர் பரவியதோடு சர்வதேச எண்ணெய் மற்றும் இயற்கை வாயு விநியோகத்தில் 20 வீதம் பங்கு வகிக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கியது சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கியது.
ஜி7 மாநாடு நடைபெறும் பிரான்சின், எவியன் லெஸ் பேயின்ஸ் ஏரிக்கரை விடுதியில் இருந்து பேசிய டிரம்ப், இந்தத் திட்டம் உலகளாவிய பொருளாதார மந்தநிலையை தடுக்கும் என்றார். ‘பொருளாதார பேரழிவை நான் பார்க்க விரும்பவில்லை’ என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார். ‘இது தொடர்ந்தால் அவ்வாறான நிலை ஒன்று ஏற்படும். அமைதி ஏற்படலாம் என்ற பேச்சு எழுந்த ஒவ்வொரு முறையும், பங்குச் சந்தை ரொக்கெட் வேகத்தில் ஏற்றம் கண்டது என்பதுதான் எனக்குத் தெரியும்’ என்றும் அவர் கூறினார்.
உடன்படிக்கை எட்டப்பட்ட அறிவிப்பு வெளியானதை அடுத்து நேற்று எண்ணெய் விலையில் மேலும் வீழ்ச்சி ஏற்பட்டது. நேற்றுக் காலை ஆசிய வர்த்தகத்தில் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் விலை ஒரு வீதத்தால் குறைந்தது பீப்பாய் ஒன்று 78.79 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. எவ்வாறாயினும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்ததை விடவும் எண்ணெய் விலை தொடர்ந்தும் 8 டொலர்கள் அதிகமாக உள்ளது.
இதில் புரிந்துணர்வு உடன்படிக்கை என்று அழைக்கப்படும் ஆரம்பக்கட்ட உடன்படிக்கையின் வன் பிரதி ஒன்றிலேயே டிரம்ப் கைச்சாத்திட்டார். அந்த ஆவணத்தில், அமெரிக்காவும் ஈரானும் இறுதி ஒப்பந்தத்தை எட்டுவதற்காக அதிகபட்சம் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிக்க உடன்பட்டுள்ளன. எனினும் இரு தரப்பினரின் பரஸ்பர விருப்புடன் அந்த காலக்கெடுவை நீட்டிக்கவும் முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அணு ஆயுதத்தை தயாரிப்பது அல்லது வாங்குவதில்லை என்று இந்த உடன்படிக்கையில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இது போரை ஆரம்பிப்பதில் ட்ரம்பின் முதன்மையான நிபந்தனையாக இருந்தமை குறிப்பிடத்தக்கது. அதேபோன்று ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் செறிவூட்டல் அளவை குறைப்பது குறித்தும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை குறிப்பிட்டுள்ளது. இதன்படி அந்த செறிவூட்டப்பட்ட யுரேனியம் ஐக்கிய நாடுகள் கண்காணிப்பு அமைப்பின் மேற்பார்வையின் கீழ் செறிவூட்டல் அளவு குறைக்கப்படுவதாக அமையும். ஆரம்பத்தில் இந்த அணு பொருட்கள் ஈரானில் இருந்து முழுமையாக வெளியேற்றப்பட வேண்டும் என்றே அமெரிக்கா வலியுறுத்தி வந்தது. குறுகலான நீர்வழி பாதையாக உள்ள ஹோர்முஸ் நீரிணையால் செல்லும் கப்பல்களுக்கு அடுத்து வரும் 60 நாட்களுக்கு கட்டணம் அறவிடப்படாது என்று உடன்படிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனினும் எதிர்காலத்தில் அவ்வாறான கட்டணம் அறவிடப்படுவதற்கான வாய்ப்பு இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் உள்ளது. போருக்கு முன்னர் இவ்வாறான சூழல் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் கலிபப், அரச தொலைக்காட்சிக்கு அளித்த போட்டி ஒன்றில், ‘ஹோர்முஸ் நீரிணை போருக்கு முந்தைய சூழலுக்கு திரும்பாது’ என்று வலியுறுத்தி இருந்தார். உடன்படிக்கைக் காலமான 60 நாட்களின் பின்னர் நீரிணை ஊடாக செல்லும் கப்பல்கள் மீது ஈரான் கட்டணம் அறவிடும் என்று வலியுறுத்தி இருந்தார். ஈரானின் பலிஸ்டிக் ஏவுகணைகளை அழிப்பதாக டிரம்ப் முன்னர் குறிப்பிட்டிருந்தபோதும், ‘மற்ற நாடுகளிடம் அவ்வாறான அயுதம் இருக்கும்போது ஈரானிடம் இருப்பதில் பிரச்சினை இல்லை’ என்று ஜி7 மாநாட்டில் வைத்து குறிப்பிட்டார்.
இந்த உடன்படிக்கையின் முதல் அம்சமாக லெபனான் உட்பட அனைத்து முன்னிலைகளிலும் இராணுவ நடவடிக்கைகள் உடனடியாகவும் நிரந்தரமாகவும் நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. எனினும் லெபனானில் இருந்து வாபஸ் பெறும் நோக்கமில்லை என்று இஸ்ரேல் குறிப்பிட்டுள்ளது. தெற்கு லெபனானில் அதன் தாக்குதல்கள் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
லெபனானில் ஹிஸ்புல்லா அமைப்புக்கு எதிரான இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கை ட்ரம்பின் கவலையை அதிகரித்துள்ளது. இது ஈரானுடனான ஒப்பந்தத்தை கவிழ்க்கும் திட்டம் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மீது அவர் குற்றம்சாட்டினார்.
நெதன்யாகு ஒரு நல்ல மனிதர் என்றும் மென்மையான அணுமுறைகளை கடைப்பிடித்தால் நல்லது என்றும் ட்ரம்ப் அறிவுரை கூறினார். ‘ஹிஸ்புல்லா அமைப்பைச் சேர்ந்த ஒருவர் ஒரு கட்டிடத்திற்குள் சென்றார் என்பதற்காக, ஒவ்வொரு முறையும் அந்தக் கட்டிடத்தை முழுவதுமாக அழிக்க வேண்டியதில்லை’ என்றார்.
இந்நிலையில் சுவிட்சர்லாந்தில் இன்று (19) நடைபெறவிருந்த அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான பேச்சுவார்த்தைகள் நடப்பது உறுதி செய்யப்படவில்லை என்று ஈரான் வெளியுறவு அமைச்சின் பேச்சாளர் இஸ்மெயில் பகாயி தெரிவித்துள்ளார்.
‘வெள்ளிக்கிழமை (இன்று) பேச்சுவார்த்தை சில மணி நேரம் வரை உறுதியாக இருந்தது, ஆனால் இரு தரப்பு (ஈரான் மற்றும் அமெரிக்க) ஜனாதிபதிகளும் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டதால், வெள்ளிக்கிழமை சந்திப்பை நிறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது’ என்று பகாயி நேற்று குறிப்பிட்டார்.




