உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் தரங்க மூன்றாம் இடத்திற்கு ஏற்றம்

1 Min Read

உலக ஈட்டி எறிதல் தரவரிசையில் இலங்கையின் ருமேஷ் தரங்க மூன்றாவது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார். கடந்த வாரம் நடைபெற்ற ரோம் டயமன்ட் லீக் போட்டியில் 92.62 மீற்றர் தூரம் எறிந்ததை அடுத்தே அவர் புதிய உச்சத்தை தொட்டுள்ளார்.

தரங்க தரநிலைப் புள்ளிகளை 1,324 ஆக அதிகரித்துக் கொண்டதை அடுத்து தரவரிசையில் ஜெனர்மனியின் ஜூலியன் வெபர் மற்றும் கிரனடாவின் அன்டர்ஸன் பீட்டர்ஸ் ஆகியோருக்கு மாத்திரமே பின்னிற்கிறார். உலகத் தரவரிசையில் வேகமாக முன்னேற்றம் கண்டிருக்கும் தரங்க இந்தத் தரவரிசையின் முதல் 20 இடங்களில் இருக்கும் இளம் வீரராவார்.

இதன்படி உலகத் தரவரிசையில் அதிக முன்னேற்றம் கண்ட தடகள வீரராக பதிவாகி இருக்கும் தரங்க ஆசியாவின் முன்னிலை ஈட்டி எறிதல் வீரராகவும் சாதனை படைத்துள்ளார். இதன்போது அவர் இந்திய ஒலிம்பிக் சம்பியன் நீராஜ் சொப்ராவையும் பின்தள்ளியுள்ளார்.

ரோம் டயமன்ட் லீக்கில் அவர் பெற்ற வெற்றி அவரது முதல் டயமன்ட் லீக் வெற்றி என்பதோடு அதன்போது அவர் புதிய போட்டிச் சாதனை மற்றும் தேசிய சாதனையையும் படைத்திருந்தார். இதன்மூலம் இந்தப் பருவத்தில் உலகில் அதிக திறமையை வெளிப்படுத்திய ஈட்டி எறிதல் வீரராகவும் சாதனை படைத்தார்.

அத்துடன் 2024 பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் அர்ஷாத் நதீம் தங்கப்பதக்கம் வென்ற பின்னர் 92 மீற்றர் தூரத்தை தாண்டிய ஒரே வீரராகவும் அவர் சாதனை படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *