இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இலங்கை 19 வயதுக்கு உட்பட்ட மகளிர் அணிக்கு இடது கை சுழல் வீராங்கனை சமுதி பிரபோதா அணித் தலைவியாக தெரிவு செய்யப்பட்டுள்ளார். இலங்கை கிரிக்கெட் சபை நேற்று (11) அறிவித்த 15 பேர் கொண்ட குழாத்திற்கு உப தலைவியாக சஞ்சனா காவிந்தி செயற்படவுள்ளார்.
இலங்கை 19 வயதுக்கு உட்பட மகளிர் அணி மூன்று டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகளில் ஆடுவதற்காகவே இந்தியா பயணமானவுள்ளது. இந்திய 19 வயதுக்கு உட்பட்ட அணிக்கு எதிரான மூன்று டி20 போட்டிகளும் எதிர்வரும் ஜூன் 22, 24 மற்றும் 27 ஆம் திகதிகளில் சென்னையில் இடம்பெறவுள்ளன. இரு அணிகளுக்கும் இடையிலான மூன்று போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடர் எதிர்வரும் ஜூன் 30 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்த தொடரின் அடுத்த இரு போட்டிகளும் ஜூலை 3 மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளன. அனைத்துப் போட்டிகளும் பாண்டிச்சேரியில் நடைபெறும்.
இலங்கை குழாம்: சமுதி பிரபோதா (தலைவி), சஞ்சனா காவிந்தி (வி.கா., உப தலைவி), நெத்மி உபேக்ஷா, மனுதி நாணயக்கார, லிமன்சா திலகரத்ன, உமயங்கனா பீரிஸ், தனொத்யா செவ்மினி, நெதாங்கனி இசுராஞ்சலி, பிரமுதி மெத்சரா, யெசாலி ஜிதரா, விமொக்ஷா பாலசூரிய, சனுகி பத்திரகே, சமோதி ஹேரத், அசனி தலகுன, டாரியா திசாநாயக்க.



