அமெரிக்கா – ஈரான் தொடர்ந்து 2ஆவது நாளாகவும் உக்கிர பரஸ்பர தாக்குதல்

4 Min Read

அமெரிக்கா மற்றும் ஈரான் நேற்று தொடர்ந்து இரண்டாவது நாளாகவும் பரஸ்பரம் வான் தாக்குதல்களை நடத்தி இருப்பதோடு அமைதி உடன்படிக்கை ஒன்றுக்கு ஈரான் உடன் இணங்காவிட்டால் மேலும் தாக்குதல் நடத்தப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

ஹோர்முஸ் நீரிணைக்கு அருகே அமெரிக்காவின் அப்பாச்சே ஹெலிகொப்டர் ஒன்று இந்த வார ஆரம்பத்தில் சுட்டுவீழ்த்தப்பட்ட சம்பவத்தை அடுத்தே மோதல் தீவிரம் அடைந்துள்ளது. பதிலுக்கு பதில் நடத்தி வரும் தாக்குதல்களில் ஈரான் பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து வருகிறது.

கடந்த ஏப்ரலில் எட்டப்பட்ட பலவீனமான போர் நிறுத்தத்திற்கு தற்போதைய போதல்கள் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த பெப்ரவரியில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் தொடுத்த போரை விரைவில் முடிவுக்குக் கொண்டுவரும் எதிர்பார்ப்பையும் சிக்கலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் ஈரானின் தேவையற்ற மற்றும் தொடர்ச்சியான தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக ‘ஈரான் முழுவதும் இராணுவ கண்காணிப்பு திறன்கள், தொடர்பாடல் அமைப்புகள் மற்றும் வான் பாதுகாப்பு தளங்களை இலக்கு வைத்து’ புதிய தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்க இராணுவம் நேற்று (11) அறிவித்தது.

பெக்ஸ் நியூஸ் தொலைக்காட்சி செய்தியாளரிடம் பேசிய டிரம்ப், ‘அமெரிக்காவின் தாக்குதல்கள் குறுகிய காலத்தில் நிறுத்தப்படும் என்றபோதும், அமெரிக்காவுடன் மிக விரைவாக ஈரான் உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திடாவிட்டால் கடுமையான குண்டுவீச்சுகள் ஆரம்பிக்கப்படும்’ என்று எச்சரித்துள்ளார்.

டிரம்பின் புதிய எச்சரிக்கையை அடுத்து எண்ணெய் விலை சுமார் 3 டொலர்களால் அதிகரித்துள்ளதோடு நேற்றை ஆசிய வர்த்தகத்திலும் எண்ணெய் விலை மீண்டும் அதிகரிப்பைக் காட்டியது.

ஈரான் நேரப்படி கடந்த புதன் நள்ளிரவில் ஆரம்பித்த அமெரிக்காவின் தாக்குதல்கள் சுமார் நான்கு மணி நேரத்தின் பின் பூர்த்தி செய்யப்பட்டதாக அமெரிக்க மத்திய கட்டளையகம் தெரிவித்தது.

இதன்போது 9.3 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஈரானின் பல பகுதிகளில் வெடிப்புச் சத்தங்கள் பதிவாகியுள்ளன. ஹோர்முஸ் நீரிணைக்கு அருகிலுள்ள சிரிக், கார்கான், பந்தர் அப்பாஸ், மினாப் மற்றும் கராஜ் நகரங்களிலும், வடக்கே காஸ்பியன் கடலுக்கு அண்மையிலுள்ள வராமின் நகரிலும் இந்த வெடிப்புகள் ஏற்பட்டதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மறுபுறம் குவைட் மற்றும் பஹ்ரைனில் உள்ள விமானத் தளங்கள் மற்றும் பஹ்ரைனில் உள்ள அமெரிக்க கடற்படையின் ஐந்தாவது படைப்பிரிவு என 18 அமெரிக்க தளங்களை இலக்கு வைத்து பதில் தாக்குதல்களை நடத்தியதாக ஈரான் இஸ்லாமிய புரட்சிக் காவல் படை தெரிவித்துள்ளது. அதேபோன்று இரண்டாவது நாளாகவும் ஜோர்தானில் உள்ள அல் அஸ்ரக் விமானத் தளத்தை இலக்கு வைத்து அமெரிக்க தளத்தின் மீது 12 பலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்களை நடத்தியதாக அது பின்னர் கூறியது.

அமெரிக்காவின் கூட்டணி நாடான குவைட் நாட்டின் இராணுவம் வெளியிட்ட தகவலின்படி, குவைட்டின் வான் பாதுகாப்பு அமைப்புகள் நாட்டை நோக்கி வந்த விரோத வான்வழி இலக்குகளை இடைமறித்ததாக குறிப்பிட்டிருப்பதோடு ஈரானின் வான் தாக்குதல்களை வான் பாதுகாப்பு அமைப்பு இடைமறித்து அழித்ததாக அந்நாட்டு மன்னரின் ஊடக ஆலோசகர் ஒருவர் எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் தாக்குதல்களுக்கு பதில் நடவடிக்கையாக ஹோர்முஸ் நீரிணை மூடப்படுவதாகவும் ஈரான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த மூலோபாய முக்கியம் வாய்ந்த நீர் வழியை தாண்ட முயற்சிக்கும் எந்தவொரு கப்பலும் இலக்காக் கூடும் என்றும், அமெரிக்காவின் செயல்கள் இராஜதந்திர முயற்சிகளை பின்னுக்கு தள்ளிவிடும் என்றும் எச்சிரிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் தீர்க்கமான கடல் வழி பாதை ஒன்றாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணை கடந்த பல மாதங்களால் முடக்கப்பட்டுள்ளது.

போர் நிறுத்த மீறல்களுக்கு அடிபணியப்போவதில்லை என்று ஈரான் ஜனாதிபதி மசூத் பர்சக்கியான் தெரிவித்துள்ளார். ‘போர் என்பது நிச்சயமாக நாட்டின் நலனுக்கு உகந்ததல்ல. ஆனால் எங்களின் கண்ணியத்தையும் இறையமையையும் மீறி தாக்குவதன் மூலம் நாங்கள் சரணடைவோம் அல்லது பின்வாங்குவோம் என்று அவர்கள் நினைத்தால், அது வெறும் கனவாகவே இருக்கும்,’ என்று அவர் தனது உரையின்போது தெரிவித்தார்.

எனினும் இந்தத் தாக்குதல்கள் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றுக்கு ஈரானுக்கு அழுத்தம் கொடுக்கும் என அமெரிக்க பாதுகாப்புச் செயலாளர் பீட் ஹென்செத் நம்பிக்கையை வெளியிட்டுள்ளார். ‘தாக்குதல்கள் எமது இராணுவ நலனை மேம்படுத்தும் என்பதோடு எமது இராஜதந்திர நிலையையும் வலுப்படுத்தும்’ என்று புளோரிடாவில் உள்ள மத்திய கட்டளையகத்திற்கு விஜயம் மேற்கொண்டபோது அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் அமெரிக்கா மற்றும் ஈரான் பல முறை பரஸ்பர தாக்குதல்களை நடத்தியுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவருது தொடர்பில் இரு தரப்புக்கும் இடையிலான பேச்சுவார்த்தைகளிலும் இதுவரை முன்னேற்றம் எட்டப்படவில்லை.

உடன்படிக்கை ஒன்றை நெருங்கி இருப்பதாக டிரம்ப் தொடர்ந்து கூறிவந்தபோதும் முக்கிய விடயங்களில் இருதரப்புக்கும் இடையே பிளவு இருப்பதாக மத்தியஸ்தர்கள் கூறுகின்றனர்.

லெபனானில் இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்புக்கு இடையிலான மோதலும் போரை முடிவுக்குக் கொண்டுவருவதில் சிக்கலை ஏற்படுத்தி வருகிறது. தெற்கு லெபனானில் இஸ்ரேல் கடந்த புதன்கிழமை நடத்திய வான் தாக்குதல்களில் குறைந்தது 13 பேர் கொல்லப்பட்டதாக லெபனான் பாதுகாப்பு தரப்பினர் தெரிவித்திருப்பதோடு இஸ்ரேல் இராணுவத்தின் மீது புதிய தாக்குதல்களை நடத்தியதாக ஹிஸ்புல்லா குறிப்பிட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *