அமைதி உடன்படிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா மற்றும் ஈரான் ‘பெரும்பாலும் பேச்சுவார்த்தை’ நடத்தி இருப்பதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்திருப்பதோடு ஈரானுடனான பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கும் டிரம்ப், எட்டப்படும் உடன்படிக்கை சர்வதேச எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பாதையாக இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை திறப்பதற்கு வழிவகுக்கும் என்று தெரிவித்துள்ளார். கடந்த பெப்ரவரியில் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது போர் தொடுத்தது தொடக்கம் இந்த நீரிணையை ஈரான் முடக்கி இருப்பது சர்வதேச எரிபொருள் நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.
‘உடன்படிக்கையின் இறுதி அம்பசங்கள் மற்றும் விபரங்கள் தொடர்பில் தற்போது பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதோடு அது தொடர்பில் விரைவில் அறிவிக்கப்படும்’ என்று டிரம்ப் தனது ட்ரூத் சோசியல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்கா மற்றும் ஈரான் ஊடகங்கள் வெளியிட்ட தகவலின்படி, ஒப்பந்தத்துக்கு வழிவகுக்கும் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல கட்டங்களைக் கொண்ட திட்டமாக அமைந்துள்ளது. அதில் பல மாதங்களாக நீடித்து வரும் மோதல்களை முடிவுக்கு கொண்டுவருவது, முக்கிய கடல் பாதையை விரைவில் மீண்டும் திறப்பது மற்றும் ஈரானுக்கு எதிரான அமெரிக்கத் தடையை நீக்குதல் போன்ற அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
மேலும், ஈரான் கைவிட வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தி வரும் செறிவூட்டப்பட்ட யூரேனிய கையிருப்பு தொடர்பான திட்டங்கள் குறித்து 30 முதல் 60 நாட்களுக்குள் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படும் என தெரியவருகிறது.
இந்தியா சென்றிருக்கும் மார்கோ ரூபியோ பேச்சுவார்த்தையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்பட்டிருப்பதகவும் அது தொடர்பில் விரைவில் அறிவிப்பு வெளியோகும் என்றும் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். மறுபுறம் புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஈரானின் உயர்பட்ட தேசிய கௌன்சில் ஒப்புதல் அளித்திருப்பதாகவும் இறுதி ஒப்புதலுக்கு அது ஈரான் உயர் மட்டத் தலைவர் அயதொல்ல மொஜ்தபா கமனேவிடம் வழங்கப்பட்டிருப்பதாகவும் ஈரான் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.
எவ்வாறாயினும் ஒன்று அல்லது இரண்டு விடயங்கள் தொடர்பில் தொடர்ந்து முரண்பாடு நிலவுவதாக ஈரானின் தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. அமெரிக்கா தொடர்ந்தும் இடையூறுகளை ஏற்படுத்தினால் இறுதி புரிந்துணர்வு ஒன்று எட்டப்படமாட்டாது என்றும் அந்த செய்தி நிறுவனம் எச்சரித்துள்ளது.
உடன்படிக்கை ஒன்று தற்போது அமுலில் இருக்கும் பலவீனமான போர் நிறுத்தத்தை பலப்படுத்துவதோடு சந்தையில் நிவாரணத்தை ஏற்படுத்துவதாகவும் அமையும். என்றபோதும் இதனால் எரிபொருள், உரம் மற்றும் உணவுப் பொருட்களில் ஏற்பட்ட விலையேற்றத்தை இது விரைவாக குறைப்பதாக அமையாது.
தற்போது போர் முடிந்தாலும் கூட, ஹோர்முஸ் நீரிணை ஊடாக முழுமையான எரிபொருள் விநியோகம் 2027 இன் முதலாவது அல்லது இரண்டாவது காலாண்டிலேயே சாத்தியமாக அமையும் என்று ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரச எண்ணெய் நிறுவனம் கடந்த வாரம் குறிப்பிட்டிருந்தது.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை நெருங்கி இருப்பதோடு அதில் ஹோர்முஸ் நீரிணையில் கட்டணம் அறவிடும் முறை இடம்பெறாது என்பதோடு ஈரான் தனது எண்ணெயை சுதந்திரமாக விற்பதற்கு அனுமதி அளிக்கக் கூடும் என்று அமெரிக்காவின் எக்சியோஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணையில் முற்றுகையை கைவிடுவதற்கு பகரமாக, அமெரிக்கா ஈரானின் துறைமுகங்களின் மீது விதிக்கப்பட்ட தடையை நீக்கும் என்றும், ஈரானிய எண்ணெய் மீதான சில தடைகளை தளர்த்தும் என்றும் அந்த அமெரிக்க செய்தி நிறுவனம், அமெரிக்க அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டி குறிப்பிட்டுள்ளது.
ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தைப் பெறுவதில்லை என்ற கடப்பாடு இந்த நகல் ஒப்பந்தத்தில் இடம்பெற்றிருப்பதாக எக்சியோஸ் குறிப்பிட்டுள்ளது.
ஈரானுடனான போரில் டிரம்ப் பல போர் இலக்குகளை முன்வைத்ததோடு, ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுக்கவே அமெரிக்க தாக்குதல் நடத்துவதாக தொடர்ச்சியாக கூறி வந்தார். அவ்வாறான ஆயுதத்தைப் பெறும் நோக்கம் இல்லை என்று ஈரான் நீண்ட காலமாக கூறிவந்தபோதும் சிவில் தேவைக்காக யூரேனியத்தை செறிவூட்டும் தனது உரிமையை அது வலியுறுத்தி வந்தது.
இந்த வரைவில் அமெரிக்கா மற்றும் அதன் கூட்டணி ஈரான் மற்றும் அதன் கூட்டணிகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என்றும் குறிப்பிட்டிருப்பதோடு பதிலாக அந்த நாடுகள் மீது முன்கூட்டி தாக்குதல் நடத்துவதில்லை என்று ஈரான் உறுதி அளித்திருப்பதாக ஈரானின் பார்ஸ் செய்தி நிறுவனம் கூறியுள்ளது.
முன்மொழிப்பட்டிருக்கும் இந்த திட்டம் மூன்று கட்டங்களாக அமையவிருப்பதாக தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. போரை முறைப்படி முடிவுக்குக் கொண்டுவருது, ஹோர்முஸ் நீரிணையை ஒட்டி ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை தீர்ப்பது, விரிவான உடன்படிக்கை ஒன்றுக்கு 30 நாள் அவகாசத்துடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிப்பது ஆகிய கட்டங்களே இதில் அடங்கும்.
அமெரிக்கா இந்த புரிந்துணர்வுக்கு இணங்கினால் மேலதிக பேச்சுவார்த்தைகள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை முடிவடையும் முஸ்லிம்களின் ஹஜ்ஜுப் பெருநாளைக்குப் பின்னர் இடம்பெறும் என்று மத்தியஸ்தம் வகிக்கும் நாடான பாகிஸ்தான் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. எனினும் இந்த உடன்படிக்கை தொடர்பில் இஸ்ரேல் அதிருப்தியில் இருப்பதாக இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன. ஈரானுடனான உடன்படிக்கை தொடர்பில் பேசுவதற்கு இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று அவசர அமைச்சரவை கூட்டத்தையும் நடத்தி இருந்தார்.
ஈரானுடனான போரின் ஒரு முனையாக இருக்கும் லெபனானில் இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகிறது. லெபனான் உட்பட அனைத்து முனைகளிலும் தாக்குதல் நிறுத்தப் பட வேண்டும் என்பது ஈரானின் முக்கிய நிபந்தனைகளில் ஒன்றாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.
மறுபுறம் போர் நிறுத்தத்தை மீறி காசாவிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடர்வதோடு நேற்று காலை மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் இஸ்ரேல் நடத்திய வான் தாக்குதல் ஒன்றில் ஒரு வயது குழந்தை ஒன்று உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ளதாக மருத்துவ வட்டாரங்களை மேற்கோள்காட்டி ரோய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதில் தாய், தந்தை மற்றும் அவர்களின் குழந்தையே கொல்லப்பட்டுள்ளனர்.
வடக்கு காசாவின் ஜபலியாவில் நேற்று நண்பகல் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிச் சூட்டில் மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.



