சொக்லேட் வடிவில் வந்த ‘குஷ்’ போதைப்பொருள்

1 Min Read

தாய்லாந்திலிருந்து சுமார் 1 கிலோ 480 கிராம்    ‘குஷ்’   ரக போதைப்பொருளை சொக்லேட் பொதிகளில் மறைத்து நாட்டுக்குள் கடத்தி வந்த இலங்கைப் பிரஜை ஒருவர், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து பொலிஸ்  போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் நேற்று காலை  (27)  கைது செய்யப்பட்டார்.கைது செய்யப்பட்டவர் மொனராகலை பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய  ஒருவரென என விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் நேற்று காலை 9.25 மணியளவில் தாய்லாந்தின் பாங்கொக்கிலிருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் UL-403 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்திருந்தார்.

அவரது பயணப் பொதியைச் சோதனை செய்தபோது, சுமார் 1 கிலோ 480 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது.   அவை இயந்திரத்தின் மூலம் சொசேஜ் வடிவில் தயாரிக்கப்பட்டு, அதன் மீது சாக்லேட் பூசப்பட்டு, காற்று புகாத வகையில் பொதி செய்யப்பட்டிருந்தது. மேலும், அவை வெளிப்புறத்தில் பிரபல சொக்லேட் வர்த்தகச் சின்னத்துடன் அச்சிடப்பட்டிருந்ததால், சாதாரண சொக்லேட்களைப் போன்று தோற்றமளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மொத்தம் 70 சொக்லேட் பொதிகளுக்குள் இந்த போதைப்பொருள் மிகவும் நுட்பமாக மறைக்கப்பட்டிருந்ததுடன், அதே வகை டொஃபி மற்றும் சொக்லேட்களுடன் கலந்து பயணப் பொதிக்குள் ஒளித்து வைக்கப்பட்டிருந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவை  சுமார்   ரூ.1 கோடியே 48 இலட்சம்    மதிப்புள்ளவை என தெரிவிக்கப்படுகிறது. கைது செய்யப்பட்ட சந்தேகநபரை, கைப்பற்றப்பட்ட ‘குஷ்’ போதைப்பொருளுடன்  மேலதிக விசாரணைகளுக்காக    நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த  பொலிஸார் நடவடிக்கை எடுத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *