ஹோர்முஸில்; தொடரும் மோதலுக்கு இடையே ஈரானின் பதிலுக்காக அமெரிக்கா காத்திருப்பு

4 Min Read

மத்திய கிழக்கில் இரண்டு மாதம் நீடித்த போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு ஈரானின் பதிலுக்காக அமெரிக்கா நேற்று (10) மூன்றாவது நாளாக காத்திருக்கும் நிலையில் ஈரான் முடக்கி இருக்கும் ஹோர்முஸ் நீரிணையை ஒட்டி தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

கட்டார் கடற்கரைக்கு அப்பால் அடையாளம் காணப்படாத வெடிபொருள் ஒன்று தாக்கியதில் சரக்குக் கப்பல் ஒன்று நேற்று தீப்பிடித்ததாக பிரிட்டன் இராணுவம் குறிப்பிட்டது. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் பிராந்தியத்தில் உள்ள கப்பல்கள் மீது இடம்பெற்று வரும் தாக்குதல்களின் தொடர்ச்சியாக இந்த சம்பவம் நடந்துள்ளது.

போர் நிறுத்தம் அமுலில் இருப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியபோதும் ஹோர்முஸ் நீரிணையை ஈரான் முடக்கி இருப்பது மற்றும் ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்காவின் முற்றுகை தொடர்வது அந்தத் போர் நிறுத்தத்தை சவாலுக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் ஈரான் மீண்டும் தாக்கப்பட்டால், புதிய ஆயுதங்கள், புதிய போர் முறைகள் மற்றும் புதிய போர்க்களங்கள் மூலம் எதிரிகள் ‘அதிர்ச்சியடைவார்கள்’ என்று ஈரான் இராணுவ பேச்சாளர் முஹமது அக்ரமி நியா எச்சரித்ததாக அந்நாட்டின் டஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

ஈரானுக்கு எதிராக அமெரிக்க தடைகளை கடைப்பிடிக்கும் நாடுகள் ‘ஹோர்முஸ் நீரிணையை கடக்கும்போது சிரமங்களை சந்திக்கும்’ என்றும், அமெரிக்கா ஈரானிய துறைமுகங்களுக்கு விதித்துள்ள தொடரும் தடையால் அந்த முக்கிய கடல் வழி ஈரானின் கட்டுப்பாட்டில் இருக்கும் என்றும் அவர் எச்சரித்தார்.

முன்னதாக ஈரான் புரட்சிக் காவல் படை கடந்த திங்கட்கிழமை விடுத்த எச்சரிக்கையில் ஈரானின கப்பல்கள் தாக்கப்பட்டால் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க தளங்கள் இலக்கு வைக்கப்படும் என்று குறிப்பிட்டது. வளைகுடாவில் ஈரான் மற்றும் அமெரிக்க படைகள் கடந்த இரு தினங்கள் பரஸ்பரம் தாக்குதல்களில் ஈடுபட்ட நிலையிலேயே அங்கு மீண்டும் மோதல் வெடிக்கும் அச்சுறுத்தலும் தொடர்ந்து நீடித்து வருகிறது.

எவ்வாறாயினும் பாகிஸ்தானை நோக்கிச் செல்லும் கட்டாரின் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயு கப்பல் ஒன்று ஹோர்முஸ் நீரிணையை நோக்கி பயணிப்பதாக கப்பல் போக்குவரத்து தரவுகள் காண்பித்துள்ளன. கட்டார் மற்றும் பாகிஸ்தான் இரு நாடுகளும் இந்தப் போரில் மத்தியஸ்த நாடுகளாக செயற்படும் நிலையில் இந்தக் கப்பல் செல்ல ஈரான் அனுமதி அளித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதன்படி கட்டார் கப்பல் நீரிணை வழியாக பயணத்தை பூர்த்தி செய்தால் கடந்த பெப்ரவரி 28 இல் ஆரம்பித்த ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போருக்குப் பின்னர் அவ்வாறு பயணித்த முதல் கட்டார் கப்பலாக அது அமையும். உலக எண்ணெய் விநியோத்தில் சுமார் 20 வீத பங்கு வகிக்கும் இந்த நீரிணை முடக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் எரிசக்தி நெருக்கடி ஒன்றை உருவாக்கி உள்ளது.

இந்தப் போரினால் கடந்த இரண்டு மாதங்களில் சுமார் ஒரு பில்லியன் பீப்பாய் எண்ணெயை உலகம் இழந்திருப்பதாக உலகின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனமான சவூதி அரம்கோவின் தலைமை நிர்வாகி அமீன் நாசர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார். எரிசக்தி விநியோகம் வழமைக்கு வந்தாலும் விநியோக அமைப்பு வழங்கத்திற்கு வருவதற்கு காலம் எடுத்துக் கொள்ளும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச அளவில் ஏற்பட்டிருக்கும் எரிசக்தி நெருக்கடி அமெரிக்க ஜனாதிபதி டொனார்ல் டிரம்ப் நிர்வாகத்திற்கு உள்நாட்டிலும் பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறாயிலும் அமைதி உடன்படிக்கை ஒன்றுக்கு வழிவகுக்கும் வகையில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஈரானின் பதிலுக்காக அமெரிக்கா தொடர்ந்து காத்துள்ளது.

ஈரானின் பதில் சில மணி நேரங்களில் கிடைக்கும் என்று எதிர்பார்ப்பதாக அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபுயோ கடந்த வெள்ளிக்கிழமை வொஷிங்டனில் வைத்து குறிப்பிட்டிருந்தார். என்றபோதும் போரை அதிகாரபூர்வமாக முடிவுக்கு கொண்டு வரும் முன்மொழி குறித்து ஈரானில் இருந்து எந்த முன்னேற்ற அறிகுறியும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஈரானின் அணுத் திட்டம், ஹோர்முஸ் நீரிணை விவகாரம் உட்பட பல விவகாரங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே உடன்பாடு ஒன்று எட்டப்பட வேண்டியுள்ளது. இதில் லெபனான் உட்பட பிராந்தியம் முழுவதும் மோதலை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என ஈரான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

எவ்வாறாயினும் லெபனான் மீது இஸ்ரேல் தொடர்ந்தும் இடைவிடாது தாக்குதல்களை நடத்தி வருகிறது. இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல்களில் மேலும் 39 பேர் கொல்லப்பட்டிருப்பதாக லெபனான் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தெற்கு லெபனான் நகரான சக்சக்கியே மீது இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் ஒரு சிறுமி உட்பட ஏழு பேர் கொல்லப்பட்டதாக அந்த அமைச்சு கூறியது.

லெபனான் மற்றும் இஸ்ரேல் இடையே அமெரிக்க மத்தியஸ்தத்தில் கடந்த ஏப்ரல் 16 ஆம் திகதி போர் நிறுத்தம் ஒன்று அறிவிக்கப்பட்டபோதும் இஸ்ரேலின் சரமாரித் தாக்குதல்கள் அங்கு குறையவில்லை. குறிப்பாக தெற்கு லெபனானில் வான் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

காசாவிலும் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில் கான் யூனிஸ் நகரில் பொலிஸ் வாகனம் ஒன்றை இலக்கு வைத்து நேற்று நடத்திய வான் தாக்குதலில் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் கடந்த ஒக்டோபர் 11 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்கள் எண்ணிக்கை 851 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 2,437 பேர் காயமடைந்துள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *