அநுராதபுரம், பழுகஸ்வெவ பகுதியில் அமைந்துள்ள உலக பாரம்பரிய முக்கியத்துவம் வாய்ந்த எல்லாங்கா (Ellanga) நீர்ப்பாசன அமைப்பை மையமாகக் கொண்டு, சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் நோக்கில் சிறப்பு அபிவிருத்தித் திட்டமொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ராஜரட்டையின் பண்டைய நீர்ப்பாசன நாகரிகத்துடன் இணைந்த சிறப்பம்சங்களையும், பாரம்பரிய கலாசார மரபுகளையும் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு அறிமுகப்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இயற்கை அழகில் சிறந்து விளங்கும் இந்தப் பகுதி, வரலாற்றுப் புகழ்பெற்ற ரிட்டிகல மலைத்தொடர் மற்றும் எல்லாங்கா அமைப்பு உள்ளிட்ட வளங்களால் சிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், ஹொரிவில பகுதியை மையமாகக் கொண்ட பாரம்பரிய ‘ஹெல வைத்திய’ முறையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சமாகக் காணப்படுகிறது. பழுகஸ்வெவ பிரதேச செயலகப்பிரிவுக்குட்பட்ட பழுகஸ்வெவ, கலபிடகல மற்றும் உடகடவெல ஆகிய கிராமங்களை மையமாகக் கொண்டு இந்தச் சுற்றுலா கிராமம் உருவாக்கப்பட்டு வருகின்றது.
இத்திட்டத்தின் கீழ், எல்லாங்கா சுற்றுச்சூழல் அமைப்பையும் ராஜரட்ட நீர்ப்பாசன மரபையும் விளக்கும் சுற்றுலா தகவல் மையம், ‘ஹெல பொஜுன்’ உணவகம், நான்கு பாரம்பரிய கிராம வீடுகள் மற்றும் குளங்களைச் சுற்றியுள்ள இறங்குதுறைகள் உள்ளிட்ட பல்வேறு கட்டுமானங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சில கிராம வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், இறங்குதுறை அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகின்றன. மேலும், நான்கு குளங்களுக்கு என எட்டு படகுகள் வழங்கப்படவுள்ளதுடன், முதற்கட்டமாக பதினொன்று மிதிவண்டிகளும் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன. இதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் படகுச் சவாரி மற்றும் மிதிவண்டிப் பயணம் ஊடாக இயற்கை அழகை அனுபவிக்கும் வாய்ப்பைப் பெறுவர். அத்துடன், கிராம வீடுகளில் பாரம்பரிய உணவுகளைச் சுவைக்கும் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இத் திட்டத்திற்கான நிதி சுற்றுலா அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளதுடன், முதற்கட்டத்திற்காக ஏழு மில்லியன் ரூபாய்க்கும் அதிகமாக நிதி செலவிடப்பட்டுள்ளது. அனுராதபுர மாவட்டச் செயலகமும் திட்டமிடல் பிரிவும் இதன் மேற்பார்வையை மேற்கொண்டு வருகின்றன. இத்திட்டம் பழுகஸ்வெவ பிரதேச செயலகத்தின் மூலம் செயற்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தின் முன்னேற்றத்தை ஆய்வு செய்வதற்காக அநுராதபுர மாவட்டச் செயலாளர் ரஞ்சித் விமலசூரிய, திட்டமிடல் பணிப்பாளர் சுகத் நயனானந்த, பழுகஸ்வெவ பிரதேச செயலாளர் சுஜீவ விஜேரத்ன, உதவி திட்டமிடல் பணிப்பாளர் மாலா குமாரிஹாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அண்மையில் அப்பகுதியைப் பார்வையிட்டனர்.



