பஞ்சாப் மாநிலம் மொஹாலியைச் சேர்ந்த சமூக ஊடக பிரபலமும் ஒப்பனைக் கலைஞருமான மன்ஜித் கவுர் (28) கடத்தப்பட்டு உயிருடன் எரிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி அண்மையில் சண்டிகர் பிஜிஐ மருத்துவமனையில் உயிரிழந்தார்.
இன்ஸ்டாகிராமில் 1.46 லட்சத்திற்கும் அதிகமான பின்தொடர்பாளர்களைக் கொண்ட இவர், அழகுக் குறிப்புகள் மற்றும் பாடல்கள் தொடர்பான வீடியோக்களைப் பதிவேற்றி வந்தார். ஹரியானாவைப் பூர்வீகமாகக் கொண்ட இவர், மொஹாலியில் உள்ள கரார் பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
கடந்த ஜூலை மாதம், சண்டிகரில் தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணைச் சந்திக்கச் சென்றபோது, இரண்டு நபர்களால் தாக்கப்பட்டுக் காரில் கடத்தப்பட்டார். மொரிண்டா பகுதிக்குக் கொண்டு செல்லப்பட்டு உயிருடன் தீவைக்கப்பட்ட அவர், பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாகச் சிகிச்சை பெற்று வந்த நிலையில் அவர் உயிரிழந்தார்.
அவருக்குத் தெரிந்த சில நபர்களுடன் ஏற்பட்ட தகராறே இதற்குக் காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மன்ஜீத்தின் தாயார் அளித்த புகாரின் பேரில், சண்டிகர் செக்டர் 34 காவல் துறையினர் இரண்டு பேர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




