சொனால் தினூஷவின் அபார துடுப்பாட்டத்தின் மூலம் இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வியை தவிர்த்த இலங்கை அணி போட்டியை சமநிலையில் நிறைவு செய்தது. எனினும் இரண்டு போட்டிகளைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி 1–0 என கைப்பற்றியது.
கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்தபோதும் மத்திய பின் வரிசையில் வந்த தினூஷ தனது விக்கெட்டை காத்துக் கடைசியாக ஆடிய நான்கு இன்னிங்ஸ்களுக்குள் தனது மூன்றாவது சதத்தை பெற்றார். இது இலங்கை அணி போட்டியை சமன் செய்வதற்கு போதுமாக அமைந்தது.
இந்த டெஸ்டில் இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 503 ஓட்டங்களைப் பெற்றதோடு இலங்கை அணி தனது முதல் இன்னிங்ஸில் 290 ஓட்டங்களுக்கு சுருண்டதை அடுத்தே இரண்டாவது இன்னிங்ஸுக்கு பலோ ஓன் செய்தது. இதன்படி 213 ஓட்டங்களால் பின்தங்கிய இலங்கை அணி நேற்று (27) கடைசி ஆட்டத்தை ஆரம்பிக்கும்போது 229 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.
இதன்போது 7 ஓட்டங்களுடன் தனது தடுப்பாட்டத்தை ஆரம்பித்த தினூஷ நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கடைசி வரை விக்கெட்டை காத்துக்கொண்டார். இதன்போது அவர் 7ஆவது விக்கெட்டுக்கு கேஷர துவன்தவுடன் இணைந்து 112 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டார். நிதானமாக ஆடிய நுவன்த 150 பந்துகளில் 46 ஓட்டங்களைப் பெற்றார்.
நுவன்த ஆட்டமிழந்த பின்னரும் தினூஷ பின்வரிசை வீரர்களை மறுமுனையில் தக்கவத்து இலங்கை அணியின் ஓட்டங்களை அதிகாரித்தார். குறிப்பாக லஹிரு குமார பத்தாவது வரிசையில் 12 ஓட்டங்களையே பெற்றபோதும் 90 பந்துகளுக்கு முகம் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன்படி இலங்கை அணி ஆட்டத்தின் கடைசி நேரத்தில் 9 விக்கெட் இழப்புக்கு 429 ஓட்டங்களைப் பெற்ற நிலையில் ஆட்டத்தை இடைநிறுத்திக் கொண்டது. இதன்மூலம் இந்தியாவுக்கு 217 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயிக்க முடிந்தது.
எனினும், போதிய கால அவகாசம் இல்லாததால் ஆட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானிக்கப்பட்டது.
இதன்போது சொனால் தினூஷ 264 பந்துகளில் 8 பௌண்டரிகள் மற்றும் 2 சிக்ஸர்களுடன் ஆட்டமிழக்காது 133 ஓட்டங்களைப் பெற்றார். அவர் இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலும் சதம் பெற்றார். தினூஷ இந்த டெஸ்ட் தொடரின் நான்கு இன்னிங்ஸ்களிலும் மூன்று சதம் ஒரு அரைச்சதத்துடன் மொத்தம் 419 ஓட்டங்களைப் பெற்றதோடு 130.66 ஓட்ட சராசரியையும் பதிவு செய்தார்.




