அமெரிக்காவுடனான போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் பேச்சுவார்த்தைகள் ஸ்தம்பித்திருக்கும் நிலையில் ஈரான் ‘முழு அளவிலான இராணுவ தாக்குதல்’ நிலைப்பாட்டுக்கு மாறவுள்ளதாக அந்நாட்டின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையில் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை காலாவதியாகி இருக்கும் நிலையில் அதனை நீடிப்பதற்கு எதிர்பார்க்கவில்லை என்றும் ஹோர்முஸ் நீரிணையை கட்டுப்படுத்துவது குறித்து ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்தும் அமெரிக்க கூட்டணி நாடான ஓமான் மீதும் தாக்குதல் நடத்துவதாக அமெரிக்கா ஜனாதிபதி டொனல்ட் டிரம்ப் எச்சரிக்கை விடுத்திருக்கும் சூழலிலேயே ஈரான் தனது நிலைப்பாட்டை மாற்றியுள்ளது.
தற்போதைய சூழலில் அமைதி பேச்சுவார்த்தையில் எந்த முன்னேற்றமும் எட்டப்படவில்லை என்பதோடு மூலோபாய முக்கியம் வாய்ந்த ஹோர்முஸ் நீரிணை வழியான எண்ணெய் கப்பல்கள் செல்வதும் முடக்கப்பட்டுள்ளது. இது கடந்த பெப்ரவரி 28 ஆம் திகதி அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது தொடுத்த போரை மேலும் தீவிரப்படுத்தும் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது.
‘ஹோர்முஸ் நீரிணையிலும், அதற்கு அப்பாற்பட்ட பரந்த பிராந்தியத்திலும் அதிகரித்து வரும் பதற்றத்தை எதிர்கொள்ள ஈரானிய தரப்புகள் தயாராக உள்ளன. கடினமான முடிவுகளை எடுக்கவும், அவற்றைச் செயல்படுத்தவும் ஈரான் தயாராக உள்ளது’ என்று மேற்படி ஈரானிய அதிகாரி தெரிவித்துள்ளார். இராஜதந்திர முயற்சிகள் தோல்வியடைந்தால், அமெரிக்காவின் கடற்படை முற்றுகையை உடைப்பதற்காக, ஈரான் ‘சரியான நேரத்தில், துல்லியமான’ இராணுவத் தாக்குதலை நடத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலே கடந்த ஜூனில் செய்துகொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கையில் போரை நிரந்தரமாக முடிவுக்குக் கொண்டுவரும் அமைதி உடன்படிக்கை ஒன்றை எட்டுவதற்கு கடந்த திங்கட்கிழமை வரை அவகாசம் வழங்கி இருந்தது. எனினும் அந்த முயற்சியில் எந்த முன்னேற்றமும் எட்டப்படாத நிலையிலேயே இந்த உடன்படிக்கை காலாவதியாகியுள்ளது.
இந்நிலையில் இந்த உடன்படிக்கையை நீடிப்பதற்கு அமெரிக்கா முயற்சி மேற்கொண்டதா என்று டிரம்பிடம் செய்தியாளர்கள் கேட்டதற்கு அவர் ‘இல்லை’ என்று பதில் அளித்தார். ‘ஈரான் வெள்ளைக் கொடியுடன் சரணடைய வேண்டும்’ என்று பொக்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் டிரம்ப் கூறியார்.
மறுபுறம் ஈரான் உடன் தனது நிர்வாகம் மேற்கொண்டு வரும் பேச்சுவார்த்தைக்கு இடையூறாக இருந்தால் ஓமான் மீதும் குண்டு வீசுவதாக டிரம்ப் எச்சரித்துள்ளார்.
சர்வதேச பொருளாதாரத்திற்கு தீர்க்கமாக இருக்கும் நீர்வழிப் பாதையான ஹோர்முஸ் நீரிணையை திறப்பது குறித்து ஈரானுடன் அமெரிக்கா மற்றும் ஓமான் தனித்தனியே பேச்சுவார்த்தை நடத்துகின்றன. அமெரிக்கா மற்றும் ஈரான் போர் நீடிக்கும் கடந்த ஆறு மாதங்களால் இந்த நீரிணை பெரும்பாலும் முடக்கப்பட்டுள்ளது.
இதில் ஹோர்முஸ் நீரிணையின் மறுமுனையில் உள்ள நாடான ஓமானுடன் ஒப்பந்தம் ஒன்றை நெருங்கி இருப்பதாக ஈரான் குறிப்பிட்டுள்ளது. இந்த நீரிணையின் தெற்கு முனையில் இருக்கும் ஓமான் நடைபெற்று வரும் மோதலில் நடுநிலை வகிப்பதாக அறிவித்துள்ளது. எவ்வாறாயினும் ஈரானின் தாக்குதல்களால் ஓமான் பெரும் பாதிப்புகளை சந்தித்துள்ளது.
மறுபுறம் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்காக அமெரிக்கா தனது சொந்த முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது. ஆனால், ‘ஓமான் எங்களுக்கு இடையூறாக இருந்தால், அவர்கள் மீது கடுமையான குண்டுவீச்சு நடத்துவோம்’ என்று டிரம்ப் கூறினார்.
தனது ஒப்பந்த முயற்சிகளுக்கு ஓமான் எந்த வகையில் இடையூறாக இருக்கும் என்று டிரம்ப் கருதுகிறார் என்பது தெளிவாக இல்லை.
பொக்ஸ் நியூஸுக்கு அளித்த அதே நேர்காணலின்போது, ஈரானில் முக்கியமான இராணுவ, பொருளாதார மற்றும் அரசியல் சக்தியாக விளங்கும் இஸ்லாமிய புரட்சிக் காவல் படையுடன் அமெரிக்கா நேரடி இரகசியத் தொடர்பு வாயிலை கொண்டுள்ளதாகவும் டிரம்ப் தெரிவித்தார். எனினும், டிரம்பின் இந்தக் கூற்றை அந்தப் படையின் செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணையில் மற்றொரு கப்பல் மீது தாக்குதல் இடம்பெற்றிருப்பதாக பிரிட்டனின் கடல்சார் வர்த்தக செயற்பாட்டு நிறுவனம் நேற்று தெரிவித்தது. ‘ஹோர்முஸ் நீரிணை வழியாக வெளியேறிச் சென்று கொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத பொருள் ஒன்று கப்பலைத் தாக்கியதாக கப்பலின் பாதுகாப்பு அதிகாரி தெரிவித்தார்’ என்று அது குறிப்பிட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து கடந்த திங்கட்கிழமையும் ஒற்றை இலக்கத்தில் இருந்ததாக கப்பல் போக்குவரத்து தரவுகள் குறிப்பிட்டுள்ளன.
கப்பல் கண்காணிப்பு நிறுவனமான கிப்ளர் வழங்கிய ஆரம்பக்கட்ட தரவுகளை மேற்கோள்காட்டி, கடந்த திங்கட்கிழமை ஹோர்முஸ் நீரிணை வழியாக 6 சரக்குக் கப்பல்கள் பயணித்ததாக ரோய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது. அவற்றில் 3 கப்பல்கள் வளைகுடாவுக்குள் நுழைந்ததோடு, மற்ற 3 கப்பல்கள் வளைகுடாவிலிருந்து வெளியேறின. இது கடந்த 10 நாட்களின் சராசரியான சுமார் 11 கப்பல்களுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவாகும். கடந்த சனிக்கிழமை கப்பல் போக்குவரத்து 3 கப்பல்களாகவும், ஞாயிற்றுக்கிழமை வெறும் 2 கப்பல்களாகவும் குறைந்திருந்தது.
இந்நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையும் தொடர்ந்து அதிகாரித்து வருகிறது. பிரெண்ட் மசகு எண்ணெய் நேற்று 0.3 வீதம் அதிகரித்து பீப்பாய் ஒன்று 91.14 டொலர்களாக உயர்வு கண்டது.




