உயர் நீதிமன்றம் மற்றும் மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு பெறும் வயதை நீடிப்பதற்கான 22ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டமூலமும், கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயதை அதிகரிப்பதற்கான நீதித்துறை அமைப்பு (திருத்த) சட்டமூலமும் இன்று (18 ) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளன.
நீதித்துறை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷண நாணயக்காரவினால் இவ்விரண்டு சட்டமூலங்களும் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளன.
சட்டமூலத்தின் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டு ஒரு வாரத்துக்குப் பின்னர், அது பாராளுமன்றத்தில் முதலாம் வாசிப்புக்காக சமர்ப்பிக்கப்பட வேண்டும். அதன் பின்னர், குறித்த சட்டமூலம் தொடர்பில் எவரும் நீதிமன்றத்தை நாடுவதற்கு ஒரு வார கால அவகாசம் வழங்கப்படும்.
முன்வைக்கப்படும் மனுக்களை விசாரிக்கும் உயர் நீதிமன்றம் 03 முதல் 21 நாட்களுக்குள் பாராளுமன்றத்திற்கு தீர்ப்பை அறிவிக்க வேண்டும்.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 65 இலிருந்து 67 ஆகவும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வு வயது 63 இலிருந்து 65 ஆகவும் அதிகரிக்கப்படும். அத்துடன், நீதித்துறை அமைப்பு (திருத்த) சட்டமூலம் நிறைவேற்றப்பட்டால், மாகாண நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம், மற்றும் நீதவான் நீதிமன்றங்களின் நீதிபதிகளின் ஓய்வு வயது 62 ஆக அதிகரிக்கப்படும்.
இதற்கிடையில், இந்த இரண்டு சட்டமூலங்களும் முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் நாளில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க ஐக்கிய மக்கள் சக்தி தலைமையிலான எதிர்க்கட்சிகள் தீர்மானித்துள்ளன.
இதேவேளை, 22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலத்தை எதிர்வரும் ஒக்டோபர் முதல் வாரத்தில் நிறைவேற்ற அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாகவும் அதற்கு ஏற்றவகையில் வியூகங்களை வகுத்துள்ளதாகவும் தெரியவருகிறது.
22ஆவது அரசியலமைப்பு திருத்தச் சட்டமூலம் தொடர்பில் நாட்டு மக்களுக்கும், மதத் தலைவர்களுக்கும், தொழிற்சங்கங்கள் மற்றும் உள்நாடு, சர்வதேசம் என அனைத்து தரப்பினருக்கும் விளக்கமளிக்கும் விசேட திட்டங்களும் அரசாங்கத்தால் வகுக்கப்பட்டுள்ளன.
பாராளுமன்றம் இன்று 18ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை கூடவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.




