மக்களுக்கு வழங்கிய ஆணையின் பிரகாரமே அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் கொண்டு வரப்படுகிறது. வழக்குகளைத் துரிதப்படுத்தி, நீதித்துறையின் மீதான நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதே இதன் நோக்கமென கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
தேசிய மக்கள் சக்தியின் ஏழாவது வட்டார சபையாக வேலனை பிரதேசத்திற்குட்பட்ட, நயினாதீவு வட்டார சபை, அண்மையில் அமுதசுரபி அன்னதான மண்டபத்தில் உத்தியோகபூர்வமாக ஸ்தாபிக்கப்பட்டது.இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாற தெரிவித்தார்.இது தொடர்பில் அமைச்சர் மேலும் கூறியதாவது:
மாகாணசபைத் தேர்தல் நிச்சயம் நடத்தப்படும்.“அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச்சட்டமூலம் தொடர்பிலேயே தற்போது அதிகம் பேசப்பட்டு வருகின்றது. இது ஒரு நல்ல விடயமாகும்.
ஊழல் மற்றும் மோசடிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கோரியே, இந்த அரசாங்கத்தை மக்கள் ஆட்சிக்கு கொண்டு வந்தனர்.எனவே, மக்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களுக்கு எதிராகச் சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இதற்கான நடவடிக்கைகள் தற்போது துரிதப்படுத்தப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவம் தொடர்பிலும் விசாரணைகள் தொடர்கின்றன. இதில் சுமார் 3,000 சாட்சியாளர்கள் உள்ளனர். இந்நிலையில், இது தொடர்பில் ஆராயும் நீதிபதிகள் ஓய்வுபெற்றால், மீண்டும் முதலிலிருந்தே சாட்சி விசாரணைகளை நடத்த வேண்டிய நிலை ஏற்படும்.
உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் சம்பவத்தின் சூத்திரதாரிகளுக்குத் தற்போதும் அச்சம் நிலவுகிறது. அதனால்தான், இந்த அரசாங்கத்தை வீழ்த்துவது பற்றி பேசி வருகிறார்கள். இனவாதம், மதவாதம் மற்றும் சிறைச்சாலைக் கலவரம் எனப் பல வழிகளில் முயன்று பார்க்கின்றனர். ஆனால், அவை எதுவுமே கைகூடவில்லை.
தற்போது விவசாயிகள் மற்றும் மீனவர்களின் பிரச்சினைகளைப் பூதாகரமாக்கியாவது ஏதேனும் செய்ய முடியுமா என்று பார்க்கிறார்கள்.அதேவேளை, மீனவர் பிரச்சினை தொடர்பாக ஆகஸ்ட் மாத இறுதியிலோ அல்லது செப்டம்பர் மாத முதல் வாரத்திலோ தமிழக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.எமது மக்கள் 30 ஆண்டுகாலப் போரினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்கள். உறவுகள், உடமைகள் மற்றும் உயிர்கள் என அனைத்தையும் இழந்து, தற்போதுதான் மீண்டும் நிமிர்ந்து நிற்கத் தொடங்கி உள்ளனர்.எனவே, எமது கடல் வளத்தை அழிப்பதற்குத் தமிழக மீனவர்களுக்கு இடமளிக்க முடியாது. தமிழகத்தில் நல்ல மீனவர்களும் உள்ளனர். ஆனால், கடல் கொள்ளையில் ஈடுபடும் சிலரே இவ்வாறு நடந்துகொள்கிறார்கள்.இந்நிலை நீடித்தால் எமது கடல் பகுதி பாலைவனமாகும் அபாயம் உள்ளது.
எனவே, இது குறித்துத் தமிழக அரசிடம் தெளிவாக எடுத்துரைக்கப்படும். முதலாவோக அதிகாரிகள் மட்டத்திலான பேச்சும், இரண்டாவதாக மீனவர் சங்கங்களுக்கு இடையிலான பேச்சும் நடத்தப்படும். தேவை ஏற்படின் தமிழக முதலமைச்சருடனும் பேசுவோம்.




