பல கோரிக்கைகளை முன்வைத்து கிராம உத்தியோகத்தர்கள் முன்னெடுத்து வந்த தொழிற்சங்க நடவடிக்கைகள்,நிறைவுக்கு வந்துள்ளன.
பொது நிர்வாக அமைச்சர் பேராசிரியர் சந்தன அபேரத்ன மற்றும் பொது நிர்வாக அமைச்சின் செயலாளருடன் நேற்று திங்கட்கிழமை நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இவர்களின் தொழிற்சங்க போராட்டம் கைவிடப்பட்டது.
இதன்போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் தொலைபேசி மூலம் கலந்துரையாடலில் இணைந்துகொண்டு, கிராம உத்தியோகத்தர்களின் கோரிக்கைகளை எதிர்வரும் வரவு – செலவுத் திட்டத்தின் ஊடாக தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததாக கிராம உத்தியோகத்தர்கள் சங்கப் பிரதிநிதிகள் தெரிவித்துள்ளனர்.தொழிற்சங்க நடவடிக்கை நிறைவடைந்துள்ள நிலையில், நாடளாவிய ரீதியில் அனைத்து கிராம உத்தியோகத்தர்களும் செவ்வாய், வியாழன் மற்றும் சனிக்கிழமைகளில் வழமையான பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் கிராம உத்தியோகத்தர் சங்கத்தின் பிரதிநிதிகள் கூறியுள்ளனர்.பயணக் கொடுப்பனவு உயர்வு உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தி,கடந்த 10 மற்றும் 11ஆம் திகதிகளில் கிராம உத்தியோகஸ்தர்கள் தொழிற்சங்கப் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர்.அரசாங்கம் தமது கோரிக்கைக்கு தீர்வை வழங்காவிடில், தொழிற்சங்கப் போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க உள்ளதாகவும் அவர்கள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்.இந்தப் பின்புலத்திலேயே நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையில் இணக்கம் ஏற்பட்டு, தொழிற்சங்க நடவடிக்கை கைவிடப்பட்டது.




