போரை மேலும் தீவிரப்படுத்த தந்திரம் புரிகிறதா இஸ்ரேல்?

5 Min Read

ஈ ரான் மீதான அமெரிக்கப் போர் இஸ்ரேலின் சதியினால் தீவிரம் பெறுகிறது என்ற சந்தேகத்தை உறுதிப்படுத்துவதாக அண்மைய நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதியின் துருக்கிய விஜயத்தின் போது அவர் மீது மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படும் ஈரானின் படுகொலை முயற்சியின் பின்னணியில் இஸ்ரேலின் புலனாய்வுத்துறையின் சதி நடவடிக்கை உள்ளதாகத் தெரியவந்துள்ளது. இத்தகவல் அமெரிக்கப் புலனாய்வுத்துறையினால் உறுதிப்படுத்தப்படுகிறது.

அவ்வாறே அமெரிக்காவில் டொனால்ட் ட்ர ம்ப்புக்கு எதிராக நிகழ்ந்த படுகொலை முயற்சிகளுக்குப் பின்னாலும் இஸ்ரேலிய சதி முயற்சி இருந்துள்ளதாகச் சந்தேகிக்கப்படுகிறது. இதனை முதன்மைப்படுத்தி சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்கா இந்தப் போரை கைவிடுமாக இருந்தால், இஸ்ரேல் பாரிய நெருக்கடியை எதிர்கொள்ளும் என்ற அடிப்படையிலேயே அத்தகைய சதிக்கோட்பாடுகளை உருவாக்கி, அதன் மூலம் போரை நிலைநிறுத்தி இஸ்ரேலின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள இஸ்ரேலிய புலனாய்வுத்துறை முயன்றுள்ளதாகத் தெரியவருகிறது.

ஈரான்- அமெரிக்க போரானது ஏற்கனவே ஹோர்மூஸ் நீரிணை, செங்கடல் போன்ற நீர்நிலைகளை இலக்கு வைத்ததாக நிகழ்ந்து வருகிறது. இப்போர் தற்பொழுது Bab-el-Mandeb Strait நீரிணை மற்றும் Gulf of Aden நீர்நிலைகளை நோக்கி விரிவடையத் தொடங்கி இருக்கின்றது. இதன் விளைவுகள் ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தில் அச்சுறுத்தலாக மாறி இருப்பதோடு, போரின் முக்கியத்துவம் தீவிரமடைய வழிவகுத்துள்ளது.

ஹோர்மூஸ் நீரிணையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக ஈரான் கூறுகிறது. ஆனால் அதை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி கூறிவருகிறார். இந்நிலையில் அதன் மூலோபாய முக்கியத்துவம் அதிகரித்துள்ளது.

தங்கள் அனுமதியின்றி எந்தக் கப்பலும் கடந்து செல்ல முடியாது என்று கூறியுள்ள ஈரான் இராணுவம், ஹோர்முஸ் நீரிணை வழியாகக் கப்பல்கள் செல்வதாகக் கூறப்படும் அமெரிக்காவின் குற்றச்சாட்டுகளை நிராகரித்துள்ளது. முன்னதாக இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் ஒரு அங்கமான பசிஜ் துணை இராணுவப் படையின் தளபதி ஹொசைன் தாயிப், ஹார்மூஸ் நீர்வழிப்பாதை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்று கூறியுள்ளார்.

உளவுத்துறைத் தோல்விகள் காரணமாக ஈரான் போர் குறித்து அமெரிக்கா தவறான கணிப்புகளைச் செய்ததாகவும், ஹோர்முஸ் ஜலசந்தி விவகாரத்தில் அதைவிடப் பெரிய தவறான கணிப்பை செய்யும் அபாயம் இருப்பதாகவும் ஈரான் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி கூறுகிறார். ஹார்மூஸ் நீரிணை தொடர்ச்சியாக ஈரானின் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் அமெரிக்கா கொண்டிருக்கின்ற பிழையான புலனாய்வுத் தகவல் இதற்கான அடிப்படை என்பதை தெரியப்படுத்தியோடு, அமெரிக்கப் புலனாய்வுத்துறையின் முன்னைய தவறான அறிக்கைகள் பற்றிய உரையாடலையும் ஈரான் வெளிப்படுத்தியுள்ளது.

இதேநேரம் அமெரிக்க ஜனாதிபதி ஈரானிடம் ஹோர்மூஸ் நீரிணையை கப்பல் போக்குவரத்திற்கு திறந்து விடுமாறும், பதிலாக அணு ஆயுத உடன்பாடு சார்ந்தும் போர் சார்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஹோர்மூஸ் நீரிணை ஈரானின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை அமெரிக்க ஜனாதிபதி உறுதிப்படுத்துகின்ற விதத்தில் இச்செய்திகள் வெளியாகின்றன.

ஹோர்முஸ் நீரிணையின் மீது அமெரிக்கா முழுமையான கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது என்ற ட்ரம்பின் கூற்றுக்கு மாறாக, அந்த நீர்வழியின் எதிர்கால முகாமைத்துவம் குறித்து ஓமானுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடரும் ஈரான் அந்த நீரிணையின் மீது தமது செல்வாக்கைத் தொடர்ந்து நிலைநாட்டி வருகிறது.

அமெரிக்காவுக்கு எதிராக இராணுவப் போரை மட்டுல்ல, பொருளாதாரப் போரையும் நடத்துவதாக ஈரான் கருதுவதால் ஹோர்முஸ் நீரிணையை மூடியே வைத்திருப்பதில் ஈரான் உறுதியாக உள்ளது என்று தெஹ்ரானில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் பத்திரிகையாளருமான முஸ்தபா கோஸ்செஸ்ம் கூறுகிறார்.

அமெரிக்காவைத் தோற்கடிக்க வேண்டுமானால் அது சமச்சீரற்ற போராக இருக்க வேண்டும் என்பதை ஈரான் அறிந்திருக்கிறது. இந்தப் பொருளாதாரப் போரில், ஹோர்முஸ் நீரிணையே மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று அவர் அல் ஜசீராவிடம் தெரிவித்துள்ளார்.

இரண்டாவது மேற்காசியப் பிராந்தியத்தில் வர்த்தக நடவடிக்கைக்கும் பெற்றோலிய பொருட்களின் ஏற்றுமதி இறக்குமதிக்கும் வாய்ப்பான பாப்-எல்-மண்டெப் நீரிணையும் புதிய முக்கிய போர்முனையாக உருவெடுத்து வருகிறது. பாப் எல்-மண்டெப் யேமனுக்கும் ஆபிரிக்காவின் ஜிபூட்டி–எரித்திரியா கடற்கரைக்கும் இடையில் அமைந்துள்ள குறுகிய கடல்வழியாகும். இது செங்கடலை ஏடன் வளைகுடாவுடனும் அங்கிருந்து அராபியக்கடல் ஊடாக இந்துசமுத்திரத்தின் மேற்குப்பகுதியுடன் இணைக்கும் முக்கிய கடல்வழிப் பாதையாகும். செங்கடலின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள சுயஸ் கால்வாயுடன் இணைவதால் ஆசியா–ஐரோப்பா இடையிலான கடல்வழி வர்த்தகத்திற்கு மிக முக்கியமான மையமாக உள்ளது.

அத்தகைய நீரிணை மீது ஹவுத்திக் கிளர்ச்சிக் குழுவினர் தமது கட்டுப்பாட்டை முதன்மைப்படுத்தி இருப்பதோடு, அதன் வழியே செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் மீது தாக்குதல்களை நடத்தினர். 11.08.2026 அன்று எகிப்துக்குச் சொந்தமான எண்ணெய்க் கப்பல் மீது ஹவுத்திகள் ஏவுகணைத் தாக்குதல் நடத்தியதாக யேமன் அதிகாரிகள் தெரிவித்தனர். இது மேற்காசியா தொடர்பிலான இரண்டாவது மிகப் பிரதானமான வர்த்தகத் தொடர்பை ஈரான் மறைமுகமாக ஆதிக்கம் செய்வதாகவே தெரிகிறது.

மூன்றாவதாக பாப்-எல்-மண்டெப் நீரிணை சீனாவின் செல்வாக்கு மிக்க ஜிபூட்டி தீவை அண்டிய பகுதியில் அமைந்திருக்கிறது. சீனாவின் கடற்படை ஜிபூட்டி தீவில் காணப்படுவது ஈரானுக்கு இன்னொரு வாய்ப்பானதாகக் கணிக்கப்படுகிறது. இந்தப் போரில் மேற்கு ஆசியாவுடனான வர்த்தகப் போக்குவரத்தின் மூன்றாவது முக்கியமான மையமாக ஏடன் வளைகுடா காணப்படுகிறது. ஏடன் வளைகுடாவுக்கு சீனா தனது 49 ஆவது கடற்படைப்பிரிவை 2026 ஓகஸ்ட் நடுப்பகுதியில் நிறுத்தியுள்ளது.

ஆக்கிரமிப்பை முடிவுக்குக் கொண்டுவருதல், காசாவில் அமைதியைக் கொண்டுவருதல் மற்றும் கடல்வழி முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவருதல் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளுக்கு அமெரிக்காவை ஒப்புக்கொள்ள வைப்பதற்கான ஈரானின் மிக முக்கியமான பேரம்பேசும் ஆயுதம் ஹோர்மூஸ் உட்பட்ட நீரிணைகளாக உள்ளன. இதனால் அமெரிக்கா தோல்வியை ஒப்புக்கொண்டு இப்பகுதியை விட்டு வெளியேறும் என்றும் ஈரான் நம்புகிறது.

அடுத்ததாக மேற்கு ஆசியப் போரில் ஈரான் அமெரிக்காவுக்கு எதிராக நிகழ்த்துவது பொருளாதாரப் போர் என்று ஈரானிய புலமையாளர்கள் விவாதித்து வருகின்றனர். அமெரிக்காவை பொருளாதார ரீதியாக முடக்குவதன் மூலம் அதன் வல்லரசு வலுவை பலவீனப்படுத்த முடியும் என்ற எண்ணத்தோடு ஈரான் செயல்படுவது தெரிகிறது. அமெரிக்கா எதிர்நோக்கி இருக்கும் போர் பொருளாதாரப் போராகும். ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் மூலம் அந்நாட்டை முடக்க எடுத்த முயற்சிகள் தற்போது அமெரிக்காவையே நெருக்கடிக்குள் தள்ளியுள்ளன. இதற்கு பின்னால் இஸ்ரேலின் சதிக்கோட்பாடுகள் உள்ளதாகவே தெரிகிறது. சதிக் கோட்பாடுகளின் அடிப்படையில் இஸ்ரேல்-அமெரிக்க உறவு விரிசல் அடைகின்ற நிலைமை ஒருபுறமிருக்க, மறுபக்கம் அமெரிக்கா உட்பட உலகளாவிய பொருளாதாரம் பாரிய நெருக்கடிக்குள் கொண்டு செல்லப்படுவதால் அமெரிக்க வல்லரசு ஆதிக்கம் முடிவுக்கு வருவதற்கான நிலையை தோற்றுவித்துள்ளது.

எனவே இராணுவ ரீதியான போரில் அமெரிக்கா மட்டுமல்ல இஸ்ரேலும் சதிக் கோட்பாடுகளால் நிலைகுலைந்து வருகின்றது. அமெரிக்கா போரிலிருந்து வெளிவர முடியாத சூழலை ஏற்படுத்தியுள்ளது. இது பொருளாதார ரீதியில் பாரிய இழப்புகளை போரில் ஈடுபடும் நாடுகளுக்கு மட்டுமல்ல, உலகளாவிய ரீதியில் ஏற்படுத்தி வருகிறது.

இதன் விளைவுகள் மேற்காசிய அரசியலில் பாரிய மாற்றங்களை ஏற்படுத்தக் கூடிய அளவுக்கு சூழலை மாற்றி இருக்கின்றது. அது மேற்காசியாவுடன் மட்டுப்பட்டதாக அமையாது என்பதே மதிப்பீடாக உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *