மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடருக்கான 15 பேர் கொண்ட இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
அனுபவ சகலதுறை வீராங்கனை சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை அணிக்கு ஹர்ஷிதா சமரவிக்ரம உப தலைவியாக செயற்படவுள்ளார். இதில் இமேஷா துலானி, கவிஷா டில்ஹாரி போன்ற அனுபவ வீராங்கனைகளுடன் இளம் வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளனர்.
மகளிர் ஆசிய கிண்ண டி20 தொடர் ஐக்கிய அரபு இராச்சியத்தில் எதிர்வரும் ஓகஸ்ட் 28 தொடக்கம் செப்டெம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தொடரில் இலங்கை அணி நடப்புச் சம்பியனாகவே களமிறங்கவுள்ளது. கடைசியாக 2024 இல் இலங்கையில் நடந்த தொடரின் இறுதிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி இலங்கை அணி கிண்ணத்தை கைப்பற்றி இருந்தது.
இந்நிலையில் நடைபெறவுள்ள ஆசிய கிண்ண தொடரில் மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்கவுள்ளன. நான்கு அணிகளாக பிரிக்கப்பட்டு நடைபெறும் குழுநிலைப் போட்டியில் இலங்கை மகளிர் அணி பி குழுவில் பங்களாதேஷ், இந்தோனேசியா மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்துடன் இடம்பெற்றுள்ளது. இதன் ஏ குழுவில் இந்தியா, பாகிஸ்தான், ஹொங்கொங் மற்றும் தாய்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
இலங்கை குழாம்:
சமரி அத்தபத்து (தலைவி), இமேஷா துலானி, சஞ்சனா காவிந்தி, விஷ்மி குணரத்ன, ஹர்ஷிதா சமரவிக்ரம (உப தலைவி), கவீஷா டில்ஹாரி, நிலக்ஷிகா சில்வா, ஹசினி பெரேரா, கௌஷினி நுத்யாங்கனா (விக்கெட் காப்பாளர்), தெவ்மி விஹங்கா, சுகந்திகா திசாநாயக்க, சமுதி பிரபோதா, சேதனா விமுக்தி, காவ்யா காவிந்தி மற்றும் மிதாலி அயோத்யா.




