இந்தோனேசியாவின் புளோரஸ் தீவில் இன்று (15) அதிகாலை வேளையில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக குறைந்தது இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனையடுத்து கரையோரப் பகுதிகளில் சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருந்தது. ரிக்டர் அளவில் 7.7 ஆகப் பதிவான இந்த நிலநடுக்கம், இன்று (உள்ளூர் நேரம்) மு.ப. 5.58 மணியளவில் (மு.ப. 3.28 இலங்கை) கிழக்கு நுசா தெங்காரா மாகாணத்திலுள்ள என்டே நகருக்கு அருகாமையில், கடலுக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அனர்த்தத்தின் போது மௌமியர் (Maumere) துறைமுகப் பகுதியில் ஒரு ஆணும் ஒரு பெண்ணும் உயிரிழந்துள்ளதாகவும், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டு அனர்த்த முகாமைத்துவ நிலையம் உறுதிப்படுத்தியுள்ளது.
நிலநடுக்கத்தைத் தொடர்ந்து அரை மணி நேரத்திற்குள் 5.9, 5.6, 6.1 ரிக்டர் அளவுகளில் மூன்று அதிர்வுகள் ஏற்பட்டதால் மக்கள் மத்தியில் கடும் பீதி நிலவியது.
மௌமியர் பிராந்தியத்தில் பல கட்டடங்கள் பலத்த சேதமடைந்துள்ளதோடு, துறைமுகப் பகுதியிலும் அழிவுகள் ஏற்பட்டுள்ளதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தின் அதிர்வு சுமார் ஐந்து இலட்சம் மக்களால் மிகவும் கடுமையாகவும், மேலும் பல மில்லியன் மக்களால் மிதமாகவும் உணரப்பட்டுள்ளது. இந்தோனேசியாவின் வானிலை மற்றும் புவி சரிதவியல் நிலையம் சுனாமி எச்சரிக்கையை விடுத்திருந்ததுடன், கரையோர மக்கள் உடனடியாக கடற்கரைகள் மற்றும் ஆற்றங்கரைகளை விட்டு வெளியேறி உயரமான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தியிருந்தது.
பாதிக்கப்பட்ட கரையோரப் பகுதியிலுள்ள மக்கள் உடனடியாக கடற்கரையிலிருந்து குறைந்தது 2 கிலோமீற்றர் தூரம் உட்புறமாக அல்லது 10 மீற்றருக்கும் அதிக உயரமான மலைப்பகுதிகளுக்குச் செல்லுமாறு அனர்த்த முகாமைத்துவ அதிகாரி அப்துல் முஹாரி அவசர வேண்டுகோள் விடுத்தார்.
கடந்த 1992 ஆம் ஆண்டு இதே பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியால் 2,500 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சோகமான வரலாறு உள்ளமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நிலநடுக்கம் ஏற்பட்ட பல பகுதிகளுக்கான போக்குவரத்துத் தொடர்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதால், சேத விபரங்களை முழுமையாக மதிப்பிடுவதில் மீட்புக் குழுவினர் சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர். அவுஸ்திரேலிய சுனாமி எச்சரிக்கை நிலையம், இந்த நிலநடுக்கத்தால் அவுஸ்திரேலிய நிலப்பரப்புக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை எனத் தெரிவித்துள்ளது.




