நடந்து முடிந்த உலகக் கிண்ணத்தின்போது இடம்பெற்றதாக குற்றச்சாட்டப்படும் பல்வேறு ஒழுக்க மீறல்கள் தொடர்பில் ஆர்ஜனடீன கால்பந்து சம்மேளனம் மற்றும் அந்த அணி வீரர்களுக்கு எதிராக பிஃபா விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இங்கிலாந்துக்கு எதிரான அரையிறுதிப் போட்டியில் ஆர்ஜன்டீன அணி 2–1 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய பின்னர் அந்த அணி வீரர்கள் சர்ச்சைக்குரிய போக்லான்ட் விவகாரம் தொடர்பில் பதாகையை காண்பித்தது குறித்தும் விசாரணை நடத்தப்படுகிறது. அந்தப் பதாகையில் இங்கிலாந்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் ‘போக்லான்ட் ஆர்ஜன்டீனாவுக்கு சொந்தமுடையது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
விளையாட்டு நிகழ்வுகளை விளையாட்டு சாராத ஆர்ப்பாட்டங்கள் அல்லது அரசியல் வெளிப்பாடுகளுக்குப் பயன்படுத்துவதைத் தடை செய்யும் தனது நடத்தை விதிமுறைகளை இந்தச் செயல் மீறியதாகக் கருதப்படலாம் என்று பிஃபா தெரிவித்துள்ளது.
அர்ஜன்டீனாவின் பல போட்டிகளில் இனவெறியைத் தூண்டும் கோஷங்கள் மற்றும் சைகைகள் எழுப்பப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள், போட்டிகள் மீண்டும் மீண்டும் தாமதமாக ஆரம்பித்தது, போட்டி மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளைப் பின்பற்றத் தவறியது, அணி மற்றும் பார்வையாளர்களால் பொருத்தமற்ற செய்திகள் காட்சிப்படுத்தப்பட்ட விவகாரம், மேலும் ரசிகர்கள் மைதானத்திற்குள் பொருட்களை எறிந்த சம்பவங்கள் தொடர்பாகவும் சர்வதேச கால்பந்து நிர்வாகம் விசாரணை நடத்தி வருகிறது.
தவிர, ஸ்பெயினுக்கு எதிரான உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பின்னர் வெற்றியீட்டிய ஸ்பெயின் அணி வீரர்களை ஆர்ஜன்டீன வீரர்கள் தாக்கிய சம்பவம் தொடர்பிலும் பிஃபா ஒழுக்காற்று நடவடிக்கையை ஆரம்பித்துள்ளது. அர்ஜன்டீன வீரர் லியாண்ட்ரோ பரேடெஸ் மீது தாக்குதல் தொடர்பான மூன்று குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. அதேவேளை, அவரது சக வீரரான நஹுவேல் மோலினா மீது இரண்டு குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், தியாகோ அல்மாடா, ஆர்ஜன்டீன அணியின் அதிகாரி ரொபெர்டோ அயாலா மற்றும் ஸ்பெயின் மத்திய கள வீரர் கவி ஆகியோர் விளையாட்டு ஒழுக்கத்திற்கு முரணான நடத்தையில் ஈடுபட்டதாக தலா ஒரு குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளனர்.




