இலங்கை வரும் இந்திய டெஸ்ட் குழாம் அறிவிப்பு

1 Min Read

இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய டெஸ்ட் குழாத்துக்கு சுழற்பந்து சகலதுறை வீரரான சரன்ஷ் ஜெயின் முதல் முறை அழைக்கப்பட்டிருப்பதோடு வேகப்பந்து வீச்சாளர் ஜெஸ்பிரித் பும்ரா மற்றும் சாய் சுதர்ஷன் ஆகியோர் உடல் தகுதியை நிரூபிக்கும் அடிப்படையில் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

உபாதையில் இருந்து மீண்டிருக்கும் ரிவிந்திர ஜடேஜா அணிக்கு திரும்பும் அதேநேரம் முதல் டெஸ்ட் போட்டிக்கான தேர்வில் வொஷிங்டன் சுந்தர் இடம்பெறத் தவறியுள்ளார். இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரின்போது சுந்தர் காயத்துக்கு உள்ளானமை குறிப்பிடத்தக்கது.

இதில் சுந்தரின் உபாதை மற்றும் இலங்கையில் பல இடது கை துடுப்பாட்ட வீரர்கள் இருப்பதைக் கருத்தில் கொண்டே ஜெயின் டெஸ்ட் அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். 33 வயதாகும் ஜெயின் அண்மையில் இலங்கை சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய ஏ அணிக்காகவும் திறமையை வெளிப்படுத்தி இருந்தார்.

ஜெயின் போன்று, சாய் சுதர்ஷனும் இந்திய ஏ அணியுடன் இலங்கை வந்திருந்ததோடு இரண்டு போட்டிகளிலும் சதம் பெற்றிருந்தார். அவர் உடல் தகுதியை நிரூபிக்காத பட்சத்தில், தெவுதத் படிகல் 03 ஆவது வரிசையில் ஆட வாய்ப்பு உள்ளது.

இந்திய வேகப்பந்து வீச்சாளர் வரிசையில் பும்ராவுடன் முஹமது சிராஜ், பரசித் கிரிஷ்னா மற்றும் அனுபவமற்ற குர்நூர் பரர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இலங்கை மற்றம் இந்திய அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் எதிர்வரும் ஓகஸ்ட் 15 ஆம் திகதி காலியில் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து இரு அணிகளும் ஆடும் இரண்டாவது டெஸ்ட் ஓகஸ்ட் 23 தொடக்கம் 27 ஆம் திகதி வரை கொழும்பு, எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெறும்.இந்திய குழாம்: சுப்மன் கில் (தலைவர்), கே.எல். ராகுல் (உப தலைவர்), யஷஸ்வி ஜெயஸ்வால், ரிஷப் பண்ட் (வி.கா.), சாய் சுதர்ஷன், துருவ் ஜுரெல் (வி.கா.), ரவிந்திர ஜடேஜா, குல்திப் யாதவ், முனவ் சுதர், ஜஸ்பிரிட் பும்ரா, முஹமது சிராஜ், பரசித் கிருஷ்ணா, குர்நூர் பரர், தெவுதத் படிகல், சரன்ஷ் ஜெயின்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *