ஸ்காட்லாந்தில் 23ஆவது பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள் தொடங்கின.
ஒலிம்பிக் மற்றும் ஆசிய விளையாட்டுப் போட்டிகளுக்குப் பிறகு நடைபெறும் மிகப்பெரிய பல்துறை விளையாட்டு நிகழ்வான 23ஆவது பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகள், ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோவில் நேற்று (23) ஆரம்பமாகின.
ஓகஸ்ட் 2 வரை நடைபெறவுள்ள இந்தப் போட்டிகளில், 74 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். செலவுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில், போட்டிகளின் எண்ணிக்கை 10 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
கிளாஸ்கோவிலிருந்து எட்டு மைல் சுற்றளவிற்குள் அமைந்துள்ள நான்கு முக்கிய விளையாட்டு வளாகங்களில் இந்தப் போட்டிகள் நடைபெற உள்ளன. 2014 இற்குப் பிறகு பொதுநலவாய நாடுகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டிகளை ஸ்காட்லாந்து நடாத்துவது இது இரண்டாவது முறையாகும்.
இந்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் இலங்கையைச் சேர்ந்த 40 விளையாட்டு வீரர்கள் பங்கேற்கின்றனர். அவர்கள் 7 விளையாட்டுப் போட்டிகளில் போட்டியிட உள்ளனர்.




