3 மாதங்களுக்குள் கூரை மட்டம் வரை எட்டியுள்ள 16 புதிய வீடுகள்

1 Min Read

– பாதிக்கப்பட்ட மக்களின் துயர் துடைக்கும் அரசின் நடவடிக்கை

‘டிட்வா’ அனர்த்தம் காரணமாக பதுளை மாவட்டத்தில் பல குடும்பங்கள் தமது வீடுகளையும் சொத்துக்களையும் இழந்து பெரும் பாதிப்புக்குள்ளாகின. குறிப்பாக, மஹியங்கனை பிரதேச செயலகப் பிரிவில் பல வீடுகள் முழுமையாகத் தரைமட்டமாகின. இந்த இக்கட்டான நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான தங்குமிடங்களை அமைத்துக் கொடுக்கும் நோக்கில், அரசாங்கம் ரூ. 50 இலட்சம் நிதி ஒதுக்கீட்டில் விசேட வீடமைப்புத் திட்டம் ஒன்றினை ஆரம்பித்திருந்தது.

இத்திட்டமானது ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாதங்கள் கூட முழுமையாக நிறைவடையாத நிலையில், தற்போது அதன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளமை அம்மக்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு அமைச்சர் சமந்த வித்யாரத்னவின் தலைமையில், கடந்த ஏப்ரல் 30ஆம் திகதி மஹியங்கனை மெதயாய கிராம உத்தியோகத்தர் பிரிவில் உள்ள பொலிஸ் பயிற்சி பாடசாலைக்கு அருகிலுள்ள அரச காணியில் இந்த வீடுகளுக்கான அடிக்கல் நடப்பட்டது. முதற்கட்டமாக, வீடுகளை முழுமையாக இழந்த 11 குடும்பங்களுக்கு 11 புதிய வீடுகள் நிர்மாணிக்கப்பட்டன. இதற்கான ஆரம்பக் கட்டப்பணிகளுக்காக ஒவ்வொரு பயனாளிகளுக்கும் தலா ரூ. 20 இலட்சம் பெறுமதியான காசோலைகள் அன்றைய தினமே வழங்கி வைக்கப்பட்டன.

தற்போது இத்திட்டத்தின் கீழ் 11 வீடுகளும் கூரை மட்டம் வரை வெற்றிகரமாக நிர்மாணிக்கப்பட்டுள்ளதுடன், அதே வளாகத்தில் மேலதிகமாக மேலும் 5 வீடுகளின் கட்டுமானப் பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி மொத்தம் 16 வீடுகள் மிகத் துரிதமாகவும் வினைத்திறனுடனும் கட்டப்பட்டு வருகின்றன.

இரண்டாம் கட்டத்திற்கான நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தவுடன் எஞ்சியுள்ள பணிகளையும் உடனடியாக நிறைவு செய்யத் தாம் தயாராக இருப்பதாகப் பயனாளிகள் தெரிவித்துள்ளனர். மஹியங்கனை பிரதேச செயலகத்தின் முழுமையான மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்படும் இத்திட்டமானது, அனர்த்தங்களால் வீடிழந்த மக்களுக்குக் குறுகிய காலத்தில் நிரந்தரத் தீர்வினைப் பெற்றுக்கொடுத்த ஒரு முன்மாதிரியான திட்டமாகக் கருதப்படுகிறது.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *