மத்திய கிழக்கு நாடுகளில் சீனா தனது இராணுவ மற்றும் பாதுகாப்புச் செல்வாக்கை நேரடியாகச் செலுத்தாமல், பாகிஸ்தான் மூலமாக விரிவுபடுத்த முயல்வதாக விமர்சனம் எழுந்துள்ளது.
பாகிஸ்தானின் இராணுவத் தளவாடங்களில் பெரும்பாலானவை இப்போது சீனத் தயாரிப்புகளாகவே உள்ளன. 2021 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் பாகிஸ்தான் இறக்குமதி செய்த ஆயுதங்களில் 80% க்கும் அதிகமானவை சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டவையாகும்.
அமெரிக்காவின் F-16 போர் விமானங்களை பாகிஸ்தான் இன்னும் பயன்படுத்தினாலும், தற்போதைய சூழலில் அது சீன ஆயுதங்களையே அதிகம் சார்ந்துள்ளது.
2025 செப்டம்பர் மாதத்தில் சவுதி அரேபியாவுடன் பாகிஸ்தான் ஒரு பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இதன்படி ஒரு நாட்டின் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது இருநாடுகளின் மீதான தாக்குதலாகக் கருதப்படும்.
இந்த ஒப்பந்தத்தின் மூலம் பாகிஸ்தான் தனது படைகளையும், சீன தயாரிப்பான JF-17 போர் விமானங்களையும் சவுதி அரேபியாவிற்கு அனுப்பியுள்ளது. இது சீன ஆயுதங்கள் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் எளிதாக நுழைவதற்குக் களமாக அமைகிறது.
சீனா தனது சொந்தப் பெயரில் நேரடியாக ஆயுதங்களை விற்காமல், பாகிஸ்தானை ஒரு இடைத்தரகராகப் பயன்படுத்தி ஆயுதச் சந்தையை விரிவுபடுத்துவாக தெரிவிக்கப்படுகிறது.
பாகிஸ்தான் மற்றும் சீனா இணைந்து தயாரிக்கும் JF-17 போர் விமானங்கள், HQ-9 வான் பாதுகாப்பு கட்டமைப்புகள் மற்றும் டுரோன்கள் போன்றவற்றை ஈராக், சவுதி அரேபியா, லிபியா, மொராக்கோ போன்ற நாடுகளுக்கு விற்க பாகிஸ்தான் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
லிபியாவின் தேசிய ராணுவத்துடன்16 JF-17 போர் விமானங்கள் மற்றும் இதர ராணுவ தளவாடங்களை உள்ளடக்கிய 4 பில்லியன் டொலர் மதிப்பிலான ஒப்பந்தத்தில் பாகிஸ்தான் ஈடுபட்டுள்ளது. இது ஐநா சபையின் ஆயுதத் தடையை மீறும் செயல் என்ற விமர்சனம் முன்வைக்கப்படுகிறது.
ஆயுதங்களை விற்பது என்பது வெறும் வியாபாரம் மட்டுமல்ல, அதனுடன் தொடர்புடைய பராமரிப்பு, உதிரி பாகங்கள் , மற்றும் இராணுவப் பயிற்சிகள் மூலம் சீன பாதுகாப்பு சுற்றுச்சூழல் அந்த நாடுகளில் நீண்ட காலத்திற்கு நிலைநிறுத்தப்படும்.
அமெரிக்கா-ஈரான் ஒப்பந்தங்களுக்குப் பிறகு நிலவும் புதிய அரசியல் சூழலைத் தனக்குச் சாதகமாக்கிக் கொண்டு, சீனா தனது நேரடி இராணுவப் பங்களிப்பைக் காட்டாமல் ஒரு வலையமைப்பின் மூலமாக மத்திய கிழக்கில் ஆதிக்கம் செலுத்த முயல்கிறது.
சுருக்கமாகச் சொன்னால், சீனா தனது பாதுகாப்புத் துறை நோக்கங்களையும், ஆயுத விநியோகத்தையும் மத்திய கிழக்கு நாடுகளில் கொண்டு சேர்க்க பாகிஸ்தானை ஒரு நுழைவு வாயிலாக மிகச் சாதுரியமாகப் பயன்படுத்திக் கொள்கிறது என சுட்டிக்காட்டப்படுகிறது.




