டெங்கு நோயாளர்கள் 53,000ஐ தாண்டியது

1 Min Read

நாட்டில் தொடரும் மழையுடனான சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோய் பரவல் மேலும் தீவிரமடைந்து வருவதாக சுகாதார அமைச்சின் டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இதனடிப்படையில், இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் டெங்கு நோயினால் 31 மரணங்கள் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதற்கிணங்க இந்த ஜூன் மாதத்தின் நேற்றைய தினம் வரை 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதுடன் இவ்வருடத்தில் இதுவரையில் பதிவாகியுள்ள மொத்த டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,000 ஐத் தாண்டியுள்ளது என்றும் அந்தப் பிரிவு தெரிவித்துள்ளது. அதற்கமைய, இந்த வருடத்தின் 25ஆவது வாரம் நிறைவடையும் நிலையில், நாட்டின் 124 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு பரவல் எச்சரிக்கை அபாய வலயங்களாகப் பெயரிடப்பட்டுள்ளன.

தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு நேற்றுக் காலை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, இந்த வருடத்தின் ஜனவரி முதலாம் திகதி முதல் நேற்று வரையிலான காலப்பகுதியில் நாடளாவிய ரீதியில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 53,159 என்பதுடன் மரணித்தவர்களின் எண்ணிக்கை 31 ஆகும் என தெரிவித்துள்ளது.

வருடத்தின் கடந்த முதல் 5 மாதங்களிலும் மாதமொன்றில் பதிவாகும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்துக்கும் குறைவான மட்டத்திலேயே காணப்பட்ட போதிலும், ஜூன் மாதத்தின் கடந்த 28 நாட்களில் மாத்திரம் 19,318 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

அதிகளவிலான டெங்கு நோயாளர்கள் பதிவான மாகாணமாக மேல் மாகாணம் காணப்படுவதுடன் மேல் மாகாணத்தில் 27,833 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். தற்போதைய சூழ்நிலையில் மத்தியில் டெங்கு நோய் பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக, நுளம்புகள் பெருகுவதைத் தடுப்பதற்கும் நுளம்பு முட்டைகள் மற்றும் புழுக்களை அழிப்பதற்கும் தங்களது சூழலைத் தூய்மையாக வைத்திருப்பது குறித்து தீவிர கவனம் செலுத்துமாறு சுகாதார அதிகாரிகள் பொதுமக்களுக்கு மீண்டும் அறிவுறுத்தியுள்ளனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *