உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டுள்ள பல நகரங்களை அவற்றின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் புனரமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
2,500 மில்லியன் ரூபா செலவில் அதற்கான திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதுடன் இந்த ஆண்டில் அவற்றில் பல திட்டங்களைச் செயற்படுத்தவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் நட்பு நகரங்கள் திட்டத்தின் கீழ் 10 நகரங்கள் மற்றும் 25 சிறிய நகரங்களையும் அபிவிருத்தி செய்வதற்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
இலங்கையில் முன்மாதிரி நகரங்களாக இனங்காணப்பட்டுள்ள கவர்ச்சிகரமான நகரங்களை அவற்றின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் எடுத்துக்காட்டும் வகையில் புனரமைக்க திட்டமிடப்பட்டுள்ளன.
அந்த நகரங்களை அடையாளப்படுத்துதல் மூலம் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஊக்குவிக்கவும், 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட ஒதுக்கீட்டின் மூலம் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சிற்கு 1,300 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்தத் திட்டத்தின் கீழ் அனுராதபுரம், கதிர்காமம், கொழும்பு மற்றும் கண்டி ஆகிய நகரங்களின் அடையாளம் மற்றும் தனித்துவத்தை எடுத்துக்காட்டும் வகையில் பொருத்தமான ஆலோசனை வழங்கல் நிறுவனத்தால் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வின் அடிப்படையில் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதற்காக 2026 ஆம் ஆண்டிற்கென 325 மில்லியன் ரூபா நிதி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், நகர அபிவிருத்தித் துறையில் முறையான, முன்னுரிமையளிக்கப்பட்ட மற்றும் தரவு அடிப்படையிலான அணுகுமுறையின் கீழ்10 நகரங்களை அபிவிருத்தி செய்வதற்கான ஒரு திட்டத்தை 2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தின் மூலம் செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது.
அந்த வகையில் அதன் திட்டத்தின் கீழ், யாழ்ப்பாணம், மாத்தளை, ஹற்றன், மட்டக்களப்பு, சிலாபம்,தம்புத்தேகம, வவுனியா, எஹெலியகொட, பதுளை மற்றும் மாத்தறை ஆகிய நகரங்களை அடிப்படையாகக் கொண்டு 217 முன்னுரிமையளிக்கப்பட்ட திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன.
அதன்படி, தெரிவு செய்யப்பட்ட நகர அபிவிருத்தி திட்டம் மற்றும் ஹட்டன், மாத்தளை நகரங்களின் அபிவிருத்திக்காக 2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட மீதமுள்ள 975 மில்லியன் ரூபா நிதி இத்திட்டத்தில் உள்ளடங்குவதால் அந்த நகரங்களின் அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா நிதி உட்பட, மொத்தம் 1,475 மில்லியன் ரூபா நிதியைப் பயன்படுத்தி, 2026 ஆம் ஆண்டிற்கான 10 நகர அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் மேற்படி திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கும் எதிர்பார்க்கப்படுகிறது.
அத்துடன் 2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்ட முன்மொழிவுகளின்படி, நகரங்களின் அபிவிருத்திக்கு அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன் கீழ், ‘நட்பு நகரங்கள்’ என்ற செயற் திட்டத்தைச் செயற்படுத்த முன்மொழியப்பட்டுள்ளது. ‘பொதுமக்கள் மற்றும் உள்ளூர் கிராமிய சமூகங்களின் வசதிகள் மற்றும் நலன்களை கருத்திற் கொண்டு சிறு நகரங்களை அபிவிருத்தி செய்தல்’ என்ற பிரதான நோக்கத்துடன், தேர்ந்தெடுக்கப்பட்ட 25 நகரங்களில் அத்தியாவசிய அபிவிருத்தித் திட்டத்தை அடையாளம் கண்டு, 2026 ஆம் ஆண்டுக்குள் அந்தத் திட்டங்களை நிறைவு செய்யவும் எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, இத்திட்டங்களைச் செயல்படுத்துவதற்காக அமைச்சரவையில் பல முன்மொழிவுகளைச் சமர்ப்பித்திருந்தார். அவற்றுக்கு அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இத்திட்டங்களை விரைவாக நடைமுறைப்படுத்துவதற்கு அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.




