சாவகச்சேரியில் ஆபத்தான மரங்களை அகற்ற உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல்

1 Min Read

சாவகச்சேரி நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்துக்கும், பொதுமக்களின் பாதுகாப்பிற்கும் அச்சுறுத்தலாகக் காணப்படும் மரங்களை, வீட்டு உரிமையாளர்கள் உடனடியாக அகற்றி ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென நகரசபை தவிசாளர் வ. ஸ்ரீபிரகாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

நகர எல்லைக்குள் அமைந்துள்ள பல காணிகளில் காணப்படும் மரங்கள், வீதியை நோக்கி ஆபத்தான முறையில் சாய்ந்திருப்பதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

வீதியை நோக்கிச் சாய்ந்துள்ள மரங்களிலிருந்து விழும் தேங்காய், பனங்காய் மற்றும் மரத்தின் கிளைகள் என்பன, அவ்வழியாகப் பயணிக்கும் பொதுமக்களுக்கு பாரிய உயிராபத்தை ஏற்படுத்தக்கூடிய ஏதுநிலையைக் கொண்டுள்ளன.அண்மையில் வீதியில் விழும் அபாயத்திலிருந்த மூன்று பனை மரங்களை, நகரசபையும் மின்சார சபையும் இணைந்து அவசரமாகப் பாதுகாப்பாக அப்புறப்படுத்தியிருந்தன. இவ்வாறான சம்பவங்கள் தொடராமல் இருக்க உரிமையாளர்களின் ஒத்துழைப்பு மிக அவசியமானது.

பொதுநலனைக் கருத்திற்கொண்டு, தமது காணிகளுக்குள் ஆபத்தான நிலையில் காணப்படும் மரங்களை அடையாளம் கண்டு, அவற்றை உரிய முறையில் அகற்றுமாறு உரிமையாளர்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

நகரசபையின் சட்டதிட்டங்களுக்கு அமைவாக பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த நகரசபை தொடர்ச்சியாகப் பணியாற்றி வருகின்ற போதிலும், இவ்வாறான விடயங்களில் வீட்டு உரிமையாளர்களின் பங்களிப்பே முழுமையான தீர்வாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *