யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு நேற்றுமுன்தினம் விஜயம் செய்த சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ சுமார் 300 மில்லியன் ரூபாய் பெறுமதியான ‘கேத்” (Cath lap) ஆய்வு கூட பிரிவை திறந்து வைத்தார்.
இதய நோய்களைக் கண்டறியவும், அறுவை சிகிச்சை இல்லாமல் குணப்படுத்தவும் பயன்படும் ஒரு அதிநவீன மருத்துவப் பரிசோதனைக் கூடமான “கேத் லாப்’ யாழ் . போதனா வைத்தியசாலையில் திறந்து வைக்கப்பட்டமை வடமாகாண மக்களுக்கான மிக பெரிய வரப்பிரசாதமாக இது அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
குறித்த நிகழ்வில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான, ச. சிறிபவனந்தராசா, க.இளங்குமரன் , ரஜீவன் ஜெயசந்திரமூர்த்தி உள்ளிட்டவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
அரச வைத்தியசாலைகளில் இதயநோய் சிகிச்சைத் துறையில் சிறந்த முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில், 4 புதிய கேத் ஆய்வகங்களை (Cath Lab) ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
இத்திட்டத்திற்காக ஒட்டுமொத்தமாக ரூ. 1,200 மில்லியன் நிதி செலவிடப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கேத் ஆய்வகங்கள் ஒவ்வொன்றின் மதிப்பும் ரூ. 300 மில்லியன் ஆகும். அதன்படி, 04 இயந்திரங்களுக்காக மொத்தம் ரூ. 1200 மில்லியன் செலவிடப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண போதனா மருத்துவமனை தவிர களுபோவில தெற்கு கொழும்பு போதனா மருத்துவமனையில் ஒரு கேத் ஆய்வகமும் ஜூலை 02 இல் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இரண்டு கேத் ஆய்வகங்களும் ஆரம்பிக்கப்படவுள்ளன.




