ரூபாய் 7 கோடி 22 இலட்சம் பெறுமதியான ‘ஹஷீஷ்’ மற்றும் ‘குஷ்’ போதைப்பொருள் தொகுதியை இலங்கைக்குக் கொண்டு வந்து, கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து வெளியே எடுத்துச் செல்ல முயன்ற இலங்கைப் பயணிகள் ஐவர், நேற்று (28) அதிகாலை விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டவர்களில் பெண் ஒருவரும் அடங்குகிறார். அனைவரும் சுமார் 30 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், கேகாலை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் நேற்று அதிகாலை 4.30 மணியளவில், தாய்லாந்து பாங்கொக் நகரிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் UL-405 என்ற விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
விசாரணைகளில், இவர்கள் புதிய முறையைப் பயன்படுத்தி ஹஷீஷ் போதைப்பொருள் 6 கிலோ 110 கிராம் மற்றும் குஷ் போதைப்பொருள் 11 கிலோ 62 கிராம் ஆகியவற்றை 15 கண்ணாடி போத்தல்களுக்குள் மறைத்து எடுத்துவந்திருந்தமை கண்டறியப்பட்டுள்ளது. மேலும், அவை இலங்கை விமான நிலையத்தில் உள்ள வரி விலக்கு (Duty Free) கடைத்தொகுதியின் பெயர் அச்சிடப்பட்ட பொலித்தீன் பைகளில் அடுக்கி எடுத்துச் செல்லப்பட்டிருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.




