அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் ஈரான் போரை முடிவுக்குக் கொண்டுவருவது அல்லது இராணுவ நடவடிக்கையை தொடர்வதற்கு முன்னர் கொங்கிரஸ் அனுமதியை கோரும் தீர்மானம் ஒன்று குடியரசுக் கட்சி ஆதிக்கத்தில் இருக்கும் அமெரிக்க செனட் சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போரை முடிவுக்குக் கொண்டுவரும் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கைச்சாத்தாகி பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தபோதும் டிரம்ப் தொடர்ந்து தாக்குதல் எச்சரிக்கையை விடுத்து வருகிறார்.
இந்நிலையில் செனட் சபையில் நேற்று முன்தினம் (23) கொண்டுவரப்பட்ட தீர்மானத்திற்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த குறிப்பிடத்தக்க உறுப்பினர்களும் ஆதரவு வழங்கி உள்ளனர்.
இதன்மூலம் அந்தத் தீர்மானம் 50–48 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதேபோன்ற ஒரு நடவடிக்கை இந்த மாத ஆரம்பத்தில் அமெரிக்க பிரதிநிதிகள்
அவையிலும் நிறைவேற்றப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. அப்போது குடியரசுக் கட்சியைச் சேர்ந்த 4 உறுப்பினர்கள் ஜனநாயகக் கட்சியினருடனும் இணைந்து 215–208 என்ற வாக்கெடுப்பில் அதற்கு ஒப்புதல் அளித்தனர்.
ஆனால் இந்தத் தீர்மானம் பெரும்பாலும் அடையாளபூர்வமானதாகவே அமையும். ஏனெனில் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்ட பின்னரும், இது டொனால்ட் டிரம்பின் பரிசீலனைக்கு அனுப்பப்படாது என்பதுடன் சட்டத்தின் அதிகாரத்தைக் கொண்டிருக்காது.
1973ஆம் ஆண்டின் போர் அதிகாரங்கள் தீர்மானம் இயற்றப்பட்ட பின், ஜனாதிபதி ஒருவரின் இராணுவ நடவடிக்கையை முடிவுக்குக் கொண்டு வர உத்தரவிடும் இணைத் தீர்மானத்துக்கு பாராளுமன்றத்தின் இரு அவைகளும் ஒப்புதல் அளிப்பது இதுவே முதல் முறையாகும். ஒரு இணைத் தீர்மானம் என்பது பாராளுமன்றத்தின் உணர்வையோ அல்லது விருப்பத்தையோ வெளிப்படுத்துகிறது, இது ஜனாதிபதியின் கையொப்பத்தைப் பெற்றுச் சட்டமாக மாறும் மற்ற சட்ட வடிவங்களுக்கு மாறானது. 2019 ஆம் ஆண்டில், யெமன் உள்நாட்டுப் போரின் மோதல்களில் இருந்து ஆயுதப் படைகளை அகற்றுமாறு கோரிய ஒரு கூட்டுத் தீர்மானத்தை டொனால்ட் டிரம்ப் வீட்டோ அதிகாரம் மூலம் ரத்து செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
டிரம்பின் குடியரசுக் கட்சி செனட் மற்றும் பிரதிநிதிகள் அவை இரண்டிலும் குறுகிய பெரும்பான்மையையே பெற்றுள்ளது. இதில் ஜனாதிபதியில் நடவடிக்கைகள் தொடர்பில் சொந்தக் கட்சியில் சில உறுப்பினர் அதிருப்தியில் உள்ளனர். இந்நிலையில் எதிர்வரும் நவம்பரில் நடைபெறவுள்ள அமெரிக்க இடைக்கால தேர்தல் கொங்கிரஸில் டிரம்ப் தனது பெரும்பான்மையை தக்கவைப்பதில் தீர்க்கமாக உள்ளது.
இதேவேளை போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான முதல் சுற்று பேச்சுவார்த்தை சுவிட்சர்லாந்தில் முடிவுக்கு வந்துள்ள நிலையில் இரு தரப்பும் முரணான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
குறிப்பாக அணுக் கண்காணிப்பாளர்களை அனுமதிக்க ஈரான் இணங்கியதாக டிரம்ப் கடந்த செவ்வாய்க்கிழமை (23) குறிப்பிட்டிருந்தபோதும், பேச்சுவார்த்தையில் அவ்வாறான இணக்கம் எட்டப்படவில்லை என்று ஈரான் குறிப்பிட்டுள்ளது. ஈரானுக்கான நிதிச் சலுகைகள், ஹோர்முஸ் நிரிணையை கட்டுப்படுத்துவது மற்றும் லெபனானில் இஸ்ரேல் தொடரும் தாக்குதல்கள் தொடர்பில் இரு தரப்பும் முரணான கருத்துகளை வெளியிட்டு வருகின்றன.
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை உலகின் 20 வீதமான எண்ணெய் விநியோகம் இடம்பெறும் ஹோர்முஸ் நீரிணை வழியாக கப்பல்கள் சுதந்திரமாக பயணிக்க வழிவகுத்துள்ளது. எனினும் லெபனானில் இஸ்ரேல் நடத்தும் தாக்குதல்கள் போர் நிறுத்தத்தை மீறுவதாகக் கூறி ஈரான் கடந்த சனிக்கிழமை அந்த நீரிணையை மீண்டும் முடக்குவதாக அறிவித்திருந்தது.
லெபனானில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மோதல் தணிந்திருந்தபோதும் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டு மேலும் ஒருவர் காயமடைந்ததாக லெபனானின் தரப்பு தெரிவித்துள்ளது.
புரிந்துணர்வு உடன்படிக்கையின்படி 60 நாட்களுக்கே நீரிணை வழியாக சுதந்திர போக்குவரத்தை அனுமதிப்பதாக ஈரான் கூறி வருகிறது. ஹோர்முஸ் நீரிணையின் மறுபுறத்தை கட்டுப்படுத்தும் ஓமானுடன் ஈரான் கடந்த செவ்வாயன்று கூட்டாக வெளியிட்ட அறிவிப்பில், இந்த நீரிணை மீதான தமது இறைமை வலியுறுத்தப்பட்டிருப்பதோடு இந்த நீர்வழிப்பாதையில் போக்குவரத்தையும் அதனுடன் தொடர்புடைய செலவுகளையும் நிர்வகிக்க இணைந்து செயல்படுவோம் என்றும் குறிப்பிட்டுள்ளது. வளைகுடாவில் உள்ள கூட்டணி நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டிருக்கும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ, எந்தவொரு இறுதி உடன்படிக்கையிலும் நீரிணையில் ஈரான் கட்டணம் அறவிட அனுமதிக்கப்பட மாட்டாது என்று வலியுறுத்தியுள்ளார்.




