தெற்கு லெபனானில் முக்கிய கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேல் மேலும் முன்னேற்றம்

4 Min Read

போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பில் ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தொடர்ந்தும் இழுபறி நீடிக்கும் நிலையில் லெபனானில் சராமாரித் தாக்குதல்களை நடத்தும் இஸ்ரேலியப் படை தெற்கு லெபனானில் உள்ள 900 ஆண்டு பழைமையான பியூட்போர்ட் கோட்டை மற்றும் அதன் மூலோபாய முக்கியம் வாய்ந்த மலைத் தொடர்களை கைப்பற்றியுள்ளது.

லெபனானில் தனது ஆக்கிரமிப்பை வேகமாக விரிவுபடுத்தி வரும் இஸ்ரேல் அங்குள்ள நப்தியே நகர் மீது தாக்குதல் தொடுக்கும் அச்சுறுத்தல் அதிகரித்திருக்கும் சூழலில் சஹ்ரானி நதியின் தெற்கே வசிக்கும் குடியிருப்பாளர்கள் அனைவரையும் வெளியேறும்படி உத்தரவிட்டுள்ளது.

இஸ்ரேல் இராணுவம் எக்ஸ் சமூகதளத்தில் அரபு மொழியில் நேற்று (31) வெளியிட்ட பதிவில், குடியிருப்பாளர்களை சஹ்ரானி நதியின் வடக்கை நோக்கி உடன் வெளியேறும்படியும், யாரேனும் அங்கு தொடர்ந்து தங்கி இருந்தால் கொல்லப்படும் அச்சுறுத்தல் இருப்பதாகவும் எச்சரித்துள்ளது. இஸ்ரேலியப் படை 2006 இற்கு பின்னர் முதன் முறையாக கடந்த வெள்ளிக்கிழமை லிடானி நகரை கடந்து லெபனானில் முன்னேறியதோடு கடந்த 24 மணி நேரத்தில் 10இற்கும் அதிகமான வெளியேற்ற உத்தரவுகளை பிறப்பித்தது.

லெபனானின் ஐந்தாவது மிகப்பெரிய நப்தியே நகருக்கு அருகே மூலோபாய மிக்க மலை உச்சியில் இருக்கும் பியூட்போர்ட் கோட்டையை இஸ்ரேல் கைப்பற்றுவது இது முதல்முறையல்ல. 1982 இல் இந்தக் கோட்டையை கைப்பற்றிய இஸ்ரேலியப் படை 18 ஆண்டுகளின் பின்னர் அது லெபனானில் இருந்து வாபஸ் பெறும்போதே அதன் கட்டுப்பாட்டை கைவிட்டது.

இந்தக் கோட்டையை கைப்பற்றியது குறிப்பிடத்தக்க மூலோபாய வெற்றி என்று இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

‘பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் வழிகாட்டுதலிலும், எனது நேரடி உத்தரவின்படியும், இஸ்ரேலிய படைகள் லெபனானில் தங்கள் இராணுவ நடவடிக்கைகளை மேலும் விரிவுபடுத்தி லிட்டானி ஆற்றைக் கடந்து, கலிலேயா எல்லைப்பகுதிகளின் பாதுகாப்புக்கும் எங்கள் படைகளின் பாதுகாப்புக்கும் மிகவும் முக்கியமான பியூட்போர்ட் உயர்நிலப் பகுதியை கைப்பற்றின’ என்று அவர் அறிவித்துள்ளார்.

தெற்கு லெபனானின் முக்கிய கலாசார மற்றும் வர்த்தக மையமாக இருக்கும் நப்தியே நகரை இஸ்ரேல் தற்போது சுற்றிவளைத்துள்ளது.

இஸ்ரேலிய தாக்குதல்களின் முன்களப் பகுதியாக வரலாற்று ரீதியில் முக்கிய பங்கு வகித்ததன் காரணமாக, நப்தியே நகரம் பல லெபனானியர்களால் எதிர்ப்புப் போராட்டத்தின் ஒரு சின்னமாகக் கருதப்பட்டு வருகிறது.

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படை தொடர்ந்து முன்னேற்றம் கண்டு வந்தபோதும் லெபனானின் ஈரான் ஆதரவு போராட்ட அமைப்பான ஹிஸ்புல்லா, இஸ்ரேலிய படைக்கு எதிராக தொடர்ந்து போராடி வருகிறது. ஹிஸ்புல்லாவின் ஆளில்லா விமானத் தாக்குதலுக்கு இலக்காகி தமது படை வீரர் ஒருவர் கொல்லப்பட்டதை இஸ்ரேல் இராணுவம் நேற்று உறுதி செய்தது. இதன்படி கடந்த மார்ச் 2 இல் லெபனானில் மோதல் வெடித்தது தொடக்கம் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டிருக்கும் இஸ்ரேலியப் படைகளின் எண்ணிக்கை 25 ஆக அதிகரித்துள்ளது.

மின்னணு தடுப்பு நடவடிக்கைகளுக்கு எளிதில் சிக்காத மற்றும் ரேடாரால் கண்டுபிடிப்பது மிகவும் கடினமான ஃபைபர்-ஒப்டிக் ஆளில்லா விமானங்களை ஹிஸ்புல்லா பயன்படுத்தி வருகிறது. ஒப்பீட்டளவில் குறைந்த செலவுடைய இந்த ஆளில்லா விமானங்கள், பல பில்லியன் டொலர்கள் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இஸ்ரேலின் பல அடுக்கு வான் பாதுகாப்பு அமைப்புகளைக் கூட ஊடுருவி செல்ல முடிந்துள்ளது.

இதேவேளை ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போரை முடிவுக்குக் கொண்டுவரும் உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் தொடர்ந்தும் சிக்கல் நிலவி வருகிறது. ஈரானுக்கு மேலும் கடுமையான அமைதி முன்மொழிவை அமெரிக்கா வழங்கி இருப்பதாக செய்தி வெளியாகி இருக்கும் நிலையில் ஈரானியர்களின் உரிமை முழுமையாக பாதுகாக்கப்படும் வரையில் அமெரிக்காவுடன் எந்த ஓர் உடன்படிக்கைக்கு ஈரான் இணங்கப்போவதில்லை என்று அதன் தலைமை பேச்சுவார்த்தையாளர் முகமது பகர் கலிபப் வலியுறுத்தியுள்ளார்.

போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான முன்மொழிவில் செய்யப்படும் எந்தவொரு மாற்றமும் உடன்படிக்கையை எட்டுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதாக அமையும். இந்தப் போரினால் ஹோர்முஸ் நீரிணை தற்போது முடக்கப்பட்டிருப்பது சர்வதேச அளவில் எரிபொருள் நெருக்கடியை உருவாக்கி உள்ளது. பலவீனமான போர் நிறுத்தம் ஒன்று அமுலில் இருந்தபோதும் அவ்வப்போது ஏற்படும் மோதல் மீண்டும் ஒருமுறை முழுமையான போராக வெடிக்கும் அபாயம் இருந்து வருகிறது.

இந்நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேலும் கடுமையான வதிமுறைகளுடன் புதிய முன்மொழிவுகளை ஈரானுக்கு அனுப்பி இருப்பதாக அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் மற்றும் எக்சியோஸ் ஊடகங்கள் கடந்த சனிக்கிழமை செய்தி வெளியிட்டுள்ளன.

எவ்வாறாயினும் ‘ஈரானிய மக்களின் உரிமைகள் உறுதி செய்யப்படும் வரையில் எந்தவொரு உடன்படிக்கைக்கும் நாம் இணங்கப்போதில்லை’ என்று ஈரான் அரச தொலைக்காட்சியில் பேசிய கலிபப் குறிப்பிட்டுள்ளார்.

ஈரான் அணு ஆயுதம் தயாரிப்பதை நிறுத்துவது மற்றும் முடக்கப்பட்டிருக்கும் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கே தாம் முன்னுரிமை அளிப்பதாக டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

‘நான் கட்டாயமாகப் பெற வேண்டிய ஒரே உத்தரவாதம், அணு ஆயுதங்கள் எதுவும் இருக்கக் கூடாது என்பதுதான். அவர்கள் அதற்கு ஒப்புக்கொண்டுள்ளனர்;. அது மிகவும் சுவாரஸ்யமான விடயமாக இருந்தது’ என்று அவர் தனது மருமகள் லாரா டிரம்பிடம் தெரிவித்தார். இந்த நேர்காணல் கடந்த சனிக்கிழமை இரவு அவரது பொக்ஸ் நியூஸ் நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. எனினும் டிரம்பின் கருத்துகள் குறித்து ஈரான் ஏற்கனவே சந்தேகங்களை வெளியிட்டிருப்பதோடு முக்கிய விவகாரங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையே தொடர்ந்து முரண்பாடு இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *