கொங்கோ ஜனநாயகக் குடியரசில் எபோலா வேகமாகப் பரவி வருவது மிகுந்த கவலையளிக்கும் சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று மெடிசின் சான்ஸ் ஃப்ரான்டியர்ஸ் (எம்.எஸ்.எப்) நிறுவனம் எச்சரித்துள்ளது.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் இந்நோய் பரவல் அறிவிக்கப்பட்டு இரண்டு வாரங்கள் ஆன நிலையில் எம்.எஸ்.எப் நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளர் டொக்டர் அலன் கோன்சாலஸ், ‘இதற்கு முன்பு குறுகிய காலத்தில் இவ்வளவு அதிகமான பாதிப்புகள் பதிவாகவில்லை என்று கூறினார்.கிழக்கு கொங்கோ மாகாணமான இடுரியில், வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்பார்வையிட உலக சுகாதார ஸ்தாபன செயலாளர் நாயகம் டொக்டர் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் சென்றிருந்த சூழலில் எம்.எஸ்.எப். நிறுவனத்தின் பிரதிப் பணிப்பாளரது இக்கருத்துக்கள் வௌியாகியுள்ளன.
கொங்கோவில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எபோலா பாதிப்புக்கு உள்ளாகி இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுவதோடு சுமார் 246 இறப்புகள் இடம்பெற்றிருக்கலாமெனவும் தெரிவிக்கப்படுகிறது.அண்டை நாடான உகாண்டாவில் ஒன்பது எபோலா உறுதிப்படுத்தப்பட்ட பாதிப்புகளும் ஒரு இறப்பும் பதிவாகியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.



