ஐபிஎல் பிளே ஓஃப் சுற்று போட்டிகள் இன்று ஆரம்பம்

2 Min Read

இந்திய பிரீமியர் லீக் தொடரின் ஆரம்பச் சுற்றுப் போட்டிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில் நேற்று முன்தினம் (24) நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை அணியை 30 ஓட்டங்களால் வீழ்த்திய ராஜஸ்தான் றோயல்ஸ் அணி கடைசி அணியாக பிளே ஓப் சுற்றுக்கு முன்னேறியது.

இதன்படி ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருக்கும் முறையே நடப்புச் சம்பியன் றோயல் சலஞ்சர்ஸ் பெங்களூரு (18), குஜராத் டைட்டன்ஸ் (18), சன்ரைசஸ் ஹைத்ராபாத் (18) மற்றும் ராஜஸ்தான் றோயல்ஸ் (16) அணிகள் இன்று (26) ஆரம்பமாகும் பிளே ஓஃப் சுற்றில் ஆடவுள்ளன.

மும்பை வான்கடே அரங்கில் நடைபெற்ற போட்டியில் அடுத்த சுற்றுக்கு முன்னேற கட்டாய வெற்றியை எதிர்பார்த்து களமிறங்கிய ராஜஸ்தான் முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட நிலையில் 20 ஓவர்களுக்கும் 8 விக்கெட்டுகளை இழந்து 205 ஓட்டங்களை பெற்றது. பின்வரிசையில் வந்த ஜொப்ரே  ஆர்ச்சர் 15 பந்துகளில் விளாசிய 32 ஓட்டங்களும் அந்த அணிக்கு உதவியது.

பதிலெடுத்தாடி மும்பை அணி ஓட்டம் பெறும் முன்னர் ரோஹித் ஷர்மாவின் விக்கெட்டை இழந்ததோடு மத்திய வரிசையில் சூர்யகுமார் யாதவ் 42 பந்துகளில் 60 ஓட்டங்களை விளாசினார். எனினும் பந்துவீச்சிலும் அபாரமாக செயற்பட்ட ஆச்சர் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தியது ராஜஸ்தானின் வெற்றியை உறுதி செய்தது.

மும்பை அணியால் 20 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 175 ஓட்டங்களையே பெற முடிந்தது. இந்நிலையில் பிளே ஓஃப் சுற்றுக்கு முன்னேறிய ராஜஸ்தான் அணி நாளை (27) நடைபெறும் எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசஸ் ஹைத்ராபாத் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இந்தப் போட்டி நியூ சன்டிகாரில் நடைபெறும்.

முன்னதாக இன்று நடைபெறும் குவாலிபயர் 1 போட்டியில் பெங்களூரு மற்றும் குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன. தர்மசாலாவில் நடைபெறும் இந்தப் போட்டியில் தோற்கும் அணிக்கு இறுதிப் போட்டிக்கு முன்னேற மற்றொரு வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன்படி குவாலிபயர் 1 போட்டியில் தோற்கும் அணிக்கும் எலிமினேட்டர் சுற்றில் வெல்லும் அணிக்கும் இடையிலான குவாலிபயர் 2 போட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை நியூ சன்டிகாரில் நடைபெறவுள்ளது. இம்முறை ஐபிஎல் தொடரில் இறுதிப் போட்டி மே 31 ஆம் திகதி அஹமதாபத்தில் நடைபெறும்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *