ஐந்து ஆண்டுகளின் பின்; ஜூலையில் எஃப்.ஏ கிண்ணத்தை நடத்த ஏற்பாடு

1 Min Read

இலங்கையின் பிரதான நொக் அவுட் கால்பந்து தொடரான கழகங்களுக்கு இடையிலான எ.ஃப்.ஏ. கிண்ண தொடரை ஐந்து ஆண்டுகளின் பின்னர் இந்த ஆண்டில் நடத்த இலங்கை கால்பந்து சம்மேளனம் திட்டமிட்டுள்ளது.

எதிர்வரும் ஜூலை 25 ஆம் திகதி ஆரம்பமாகும் இந்தத் தொடரில் இலங்கை கால்பந்து சம்மேளத்தின் கால்பந்து லீக்குகளை பிரதிநிதித்துவம் செய்து 700 தொடக்கம் 800 வரையான அணிகள்; பங்கேங்கும் என்று எதிர்பார்ப்பதாக இலங்கை கால்பந்து சம்மேளன தலைவர் ஜஸ்வர் உமர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது 65 கால்பந்து லீக்குகள் இலங்கை கால்பந்து சம்மேளனத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. இந்த  எஃப்.ஏ. கிண்ணத்திற்கு கால்பந்து லீக்குகளுக்கு தேவையான நிதி எதிர்வரும் ஜூன் 6 ஆம் திகதி நுவரெலியாவில் நடைபெறவுள்ள இலங்கை கால்பந்து சம்மேளனத்தின் வருடாந்த பொதுக் குழு கூட்டத்தில் வழங்கப்படவுள்ளது.

இதன்படி, எஃப்.ஏ. கிண்ணத்திற்கு அணிகளை களமிறக்குவது அனைத்து கால்பந்து லீக்குகளுக்கும் கட்டாயமாக உள்ளது. இந்தத் தொடருக்கு அணிகளை அனுப்பத் தவறும் லீக்குகளின் வாக்குரிமையை இடைநிறுத்துவதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனம் தீர்மானித்துள்ளது.

எஃப்.ஏ. கிண்ண கால்பந்து தொடர் 1948 தொடக்கம் இலங்கையில் நீண்ட வரலாற்றைக் கொண்டது. 1948 தொடக்கம் 1987 வரை இந்தத் தொடர் சிலோன் எஃப்.ஏ. கிண்ணமாக நடத்தப்பட்டு வந்த நிலையில் 1988 தொடக்கம் பல்வேறு அனுசரணையாளர்களின் பெயரில் நடத்தப்பட்டது. இதில் பிரிஸ்டல் கிண்ணம், ஷார்ப் கிண்ணம், ஹொல்சின் கிண்ணம், கார்கில்ஸ் கிண்ணம் மற்றும் வின்டேஜ் கிண்ணம் என்ற பெயர்களிலும் இந்தப் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

இலங்கையின் மிகப் பழைமையான விளையாட்டுக் கழகமாக உள்ள சோண்டர்ஸ் சாதனை எண்ணிக்கையாக 15 முறை எஃப். ஏ. கிண்ணத்தை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கடைசியாக 2020 இல் நடந்த தொடரில் சோண்டர்ஸ் விளையாட்டுக் கழகத்தை 6–5 என்ற பெனால்டி சூட் அவுட் முறையில் வீழ்த்திய பொலிஸ் விளையாட்டுக் கழகம் சம்பியன் கிண்ணத்தை வென்றது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *