பிஃபா உலகக் கிண்ணப் போட்டி நெருங்கியுள்ள நிலையில் ஆர்ஜன்டீன நட்சத்திரம் லயனல் மெஸ்ஸி உபாதைக்கு உள்ளாகியுள்ளார்.
அமெரிக்காவின் மேஜர் லீக் கால்பந்து தொடரில் இன்டர் மியாமி அணிக்காக ஆடும் 38 வயது மெஸ்ஸி கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பிலடெல்பியா யூனியன் அணிக்கு எதிரான போட்டியில் உபாதை காரணமாக 73 ஆவது நிமிடத்தில் மைதானத்தை விட்டு வெளியேறினார். தனது இடது தொடைப் பகுதியை பிடித்த வண்ணமே அவர் அரங்கு திரும்பினார். எனினும் இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 6–4 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டிய இருந்தது.
‘எனக்குத் தெரிந்தவரை, காயம் குறித்த மருத்துவ அறிக்கை இன்னும் நம்மிடம் இல்லை, ஆனால் அவர் உண்மையிலேயே சோர்வாக இருந்தார்’ என்று போட்டிக்குப் பின்னர் இன்டர் மியாமி பயிற்சியாளர் கில்லர்மோ ஹோயோஸ் குறிப்பிட்டுள்ளார்.
2022 உலகக் கிண்ணத்தை வென்ற மெஸ்ஸியின் ஆர்ஜன்டீன அணி இம்முறை தொடரில் நடப்புச் சம்பியனாகவே களமிறங்கவுள்ளது. மெஸ்ஸி இம்முறை தொடரில் பங்கேற்பது இன்னும் உறுதி செய்யப்படாதபோதும் தனது ஆறாவது உலகக் கிண்ணத் தொடரில் அவர் களமிறங்குவார் என்று பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
பிஃபா உலகக் கிண்ண போட்டி அமெரிக்கா, கனடா மற்றும் மெக்சிகோவில் எதிர்வரும் ஜுன் 11 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக ஆர்ஜன்டீன அணி இந்த வாரம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஜே குழுவில் இடம்பெற்றிருக்கும் ஆர்ஜன்டீனா எதிர்வரும் ஜூன் 16 ஆம் திகதி தனது முதல் போட்டியில் அல்ஜீரியாவை எதிர்கொள்ளவுள்ளது.
எட்டு முறை பெலன் டியோர் விருதை வென்றிருக்கும் மெஸ்ஸி கடந்த 2023 இல் மியாமி அணியில் இணைந்தது தொடக்கம் தனது பணிச் சுமையை கவனமாக நிர்வகித்து வருகிறார். அவர் உபாதை காரணமாக பல போட்டிகளில் ஓய்வெடுக்க நேர்ந்தமை குறிப்பிடத்தக்கது.



