ஈரான் – அமெரிக்க உடன்படிக்கையில் கடைசி நேர முரண்பாடுகள் நீடிப்பு

4 Min Read

ஈரானுக்கு எதிரான அமெரிக்கா மற்றும் இஸ்ரேலின் போர் முடிவுக்கு வரும் எதிர்பார்ப்பு அதிகரித்த நிலையில் சர்வதேச சந்தையில் எண்ணெய் விலையில் வீழ்ச்சி கண்டபோதும் இன்னும் இறுதி உடன்படிக்கை ஒன்று உறுதி செய்யப்படவில்லை.

இரு தரப்புக்கும் இடையிலான முரண்பாடுகள் தொடர்ந்து நீடிக்கும் நிலையில் மத்தியஸ்த நாடான பாகிஸ்தான் ஊடாக தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன. எனினும் எதிர்பார்க்கப்படும் புரிந்துணர்வு உடன்படிக்கையின் பல விடயங்கள் தொடர்பில் இரு தரப்புக்கும் இடையில் முரண்பாடு இருந்து வருவதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.  எவ்வாறாயினும் ஈரானுடனான உடன்படிக்கைக்கு பெரும்பாலும் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு விட்டதாகவும் விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டிருந்தார். எனினும் உடன்படிக்கை ஒன்றுக்கு தமது பேச்சுவார்த்தைக் குழு அவசரம் காட்டாது என்று டிரம்ப் பின்னர் அறிவித்தார்.

இந்நிலையில் நேற்று (25) எண்ணெய் விலை கடந்த இரண்டு வாரங்கள் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டது. சர்வதேச எண்ணெய் விலைகளுக்கான பிரதான குறியீடாக உள்ள பிரெண்ட் ரக மசகு எண்ணெய் 5 வீதம் சரிவு கண்டு பீப்பாய் ஒன்று 97.94 டொலர்களாக வீழ்ச்சி கண்டது. இது ஒரு மாதத்திற்கு முன்னர் இருந்ததை விடவும் 9 வீத வீழ்ச்சி என்றபோதும் போர் ஆரம்பிப்பதற்கு முன்னர் இருந்த நிலைமையுடன் ஒப்பிடுகையில் தொடர்ந்து மூன்றில் ஒரு பங்கு அதிகரிப்பாகவே உள்ளது.

கடந்த ஞாயிறன்று டிரம்ப் வெளியிட்ட சமூக ஊடக பதிவில் ஈரானுடனான பேச்சுவார்த்தை முறையாகவும் ஆக்கபூர்வமாகவும் இடம்பெற்று வருவதாக குறிப்பிட்டிருந்தார். எனினும் ‘உடன்பாடு ஒன்றை எட்டுவதில் அவசரம் காட்ட வேண்டாம்’ என்று அதிகாரிகளை அறிவறுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். ‘இரு தரப்பினரும் அவசரப்படாமல், நிதானமாகச் செயல்பட்டு அதைச் சரியாகச் செய்ய வேண்டும். தவறுகளுக்கு இடமில்லை’ என்று அவர் ட்ரூத் சோசியல் சமூக ஊடகத்தில் எழுதியுள்ளார்.  இந்நிலையில் ஈரான் உடன் அமெரிக்கா சிறந்த உடன்படிக்கை ஒன்றுக்கு வரும் அல்லது அந்த நாட்டை வேறு வகையில் கையாளும் என்று அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் மார்கோ ருபியோ நேற்று (25) குறிப்பிட்டிருந்தார். மூன்று மாதங்கள் நீடிக்கும் இந்தப் போரில் உடன்படிக்கை ஒன்றை எட்டுவது தொடர்பில் அமெரிக்கா தற்போது குறைத்து மதிப்பிடும் வகையிலான கருத்துகளை வெளியிட்டு வருகிறது.

இந்தியா பயணமாகி இருக்கும் ருபியோ புது டெல்லியில் செய்தியாளர்களிடம் நேற்று பேசும்போது, ‘அமெரிக்கா, மாற்று வழிகளை ஆராய்வதற்கு முன், இராஜதந்திர பேச்சுவார்த்தைகள் வெற்றி பெறுவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் வழங்கும்’ என்றார்.

‘(ஹோர்முஸ்) நீரிணையை திறந்து வைத்து, அதன் வழியாகச் செல்லும் திறனை உறுதி செய்வது, அணு விவகாரம் குறித்து உண்மையான, முக்கியமான மற்றும் காலக்கெடு கொண்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவது போன்ற விடயங்களில் மிகவும் உறுதியான முன்மொழிவு இடம்பெற்றுள்ளது.

நம்பிக்கையுடன் சொல்கிறேன், இதை நாம் வெல்ல முடியும்’ என்று ருபியோ குறிப்பிட்டுள்ளார். ஈரான் அரசு தரப்பில் இருந்து இது தொடர்பில் உடன் எந்த பதிலும் வெளியிடப்படவில்லை. எனினும் ஈரான் புரட்சிக் காவல் படையுடன் தொடர்புபட்ட தஸ்னிம் செய்தி நிறுவனம், உடன்படிக்கை ஒன்றை எட்டுவதில் அமெரிக்கா தொடர்ந்து இடையூறாக இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இதில் முடக்கப்பட்ட சொத்துகளை விடுவிக்கும் ஈரானின் கோரிக்கையும் அடங்குவதாக தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மத்தியஸ்தர்கள் மூலம் நடைபெறும் தொடர்புகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால், அமெரிக்காவின் மீது குறிப்பிடத்தக்க சந்தேகப்பார்வை நிலவுவதுடன், பேசப்பட்டு வரும் பல அம்சங்கள் குறித்து இன்னும் கருத்து வேறுபாடுகள் நீடிப்பதாக பேச்சுவார்த்தை தொடர்பில் தெரிந்த வட்டாரங்களை மேற்கோள்காட்டி தஸ்னிம் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

‘ஒரு ஆரம்பக்கட்ட புரிந்துணர்வு எட்டப்பட்டாலும் கூட, அதனால் அமெரிக்கா குறித்த ஈரானின் பார்வை மாறிவிட்டது அல்லது தற்போதைய நிர்வாகம் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் என்ற நம்பிக்கை ஈரானுக்கு ஏற்பட்டுவிட்டது என்று அர்த்தமல்ல,’ என்றும் அது குறிப்பிட்டுள்ளது. ஈரானின் அணுத் திட்டம், லெபனானின் ஹிஸ்புல்லா போராளிகளுக்கு எதிரான இஸ்ரேலின் போர் மற்றும் தடைகளை தளர்த்தி வெளிநாட்டு வங்கிகளில் முடக்கப்பட்டிருக்கும் ஈரானின் பல பில்லியன் டொலர் எண்ணெய் வருவாயை விடுக்கும் ஈரானின் கோரிக்கை ஆகிய பல விடயங்கள் தொடர்பில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே தொடர்ந்து முரண்பாடு இருந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதில் ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கும், அதற்கு பகரமாக அமெரிக்கா தனது கடற்படை முற்றுகையை நீக்கி, ஈரானின் அதிக அளவில் செறிவூட்டப்பட்ட யுரேனியம் கையிருப்பு தொடர்பான பிரச்சினைகளை தீர்ப்பதற்கும், ஈரான் கொள்கை ரீதியாக ஒப்புக்கொண்டுள்ளது என்று அமெரிக்க மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி ரோய்ட்டர் செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

போருக்கு முன்னர் முக்கிய நீர்வழிப் பாதையாக உள்ள ஹோர்முஸ் நீரிணை ஊடாக சர்வதேச எண்ணெய் மற்றும் திரவமாக்கப்பட்ட இயற்கை வாயுவில் ஐந்து ஒரு பங்கான விநியோகங்கள் இடம்பெற்று வந்தன. ஈரான் இந்த நீரிணையை முடக்கி இருப்பது சர்வதேச எரிபொருள் நெருக்கடிக்கு காரணமாகியுள்ளது.

மறுபுறம் தெற்கு லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் நிலையில் அங்குள்ள 10 கிராமங்களில் இருக்கும் குடியிருப்பாளர்களை வெளியேறுவதற்கு இஸ்ரேலிய இராணுவம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதேபோன்று  கபிர் ருமன் ஜர்மக் நெடுஞ்சாலையில் வாகனங்கள் மீது மூன்று இஸ்ரேலிய ஆளில்லா விமானங்கள் நடத்திய தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டதாக லெபனான் தேசிய செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.

மறுபுறம் காசாவிலும் போர் நிறுத்தத்தை மீறி இஸ்ரேல் தாக்குதல்களை நடத்தி வருவதோடு தெற்கு காசாவில் அல் மவாசி மீது நேற்று நடத்திய செல் குண்டு தாக்குதலில் பலஸ்தீனர் ஒருவர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டுள்ளது. மத்திய காசாவின் மகாசி அகதி முகாமில் உள்ள வீடு ஒன்றின் மீது இஸ்ரேல் இராணுவம் நடத்திய குண்டுவீச்சில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *